பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும்


பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 18 March 2018 4:15 AM IST (Updated: 18 March 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

பாரதிதாசன் பல் கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என்று செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மணிகண்டம்,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் கூட்டம் பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைவேந்தர் மணிசங்கர் தலைமை தாங்கினார். பதிவாளர் கோபிநாத் கணபதி வரவேற்றார். இதைத்தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பேரவை ஆண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பேரவை உறுப்பினர்களால் தீர்மான கூட்டப்பொருள் கொண்டுவரப்பட்டது. கூட்டத்தில் பாரதிதாசன் பல் கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் பதவி பெயரை, உதவி பேராசிரியர் என்று மாற்ற வேண்டும். மேலும் அவர்களின் மாத ஊதியத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஎச்.டி., ஆய்வு கட்டுரையை மதிப்பீடு செய்யும் தேர்வாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். உறுப்புகல்லூரிகள் நடத்துவதற்கு பல்கலைக்கழக சட்டம் இடம் அளிக்காதபோது, இந்த பல் கலைக்கழகத்தின் உறுப்பு மற்றும் மாதிரி கல்லூரிகளை அரசிடம் ஒப்படைக்க ஆவன செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மேலும் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் பணிகளை எளிதாக்கும் வகையிலும், வெளிப்படையான நிர்வாகத்திற்காகவும் முந்தைய நடைமுறைப்படியே தேர்வு கட்டுப்பாட்டாளரின் நேரடி பார்வையின் கீழ் நடைபெற ஆவன செய்ய வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையங்களை விரிவு படுத்த வேண்டும். பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் சில பேராசிரியர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பல பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகம் மேலும் திறமையாக செயல்பட ஒரு வருக்கு ஒரு பதவி அல்லது பொறுப்பு மட்டும் வழங்க வேண்டும்.

பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. தற்போது, அது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. இதனால் அங்கிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி தடைபட்டுள்ளது. பல்கலைக்கழக நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, ரூ.500 கோடி ரூபாயை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழக உறுப்புகல்லூரிகளில் இணை பேராசிரியர் பதவி குறைவாக உள்ளது. அதைபோக்க உதவி பேராசிரியர்களை, இணை பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த தீர்மானங்கள் மீது பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர் மற்றும் செனட் (ஆட்சிக்குழு) உறுப்பினர்கள் பதில் அளித்து பேசினர்.

கூட்டத்தில் சிண்டிகேட் உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ராஜகோபால், சொக்கலிங்கம் மற்றும் செனட் சபை உறுப்பினர்கள் அப்துல் ரசாக், ரவிச்சந்திரன், சிற்றரசு, ஜூலி, செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் பல்கலைக்கழக முறைகேடு புகார் தொடர்பாக காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முறைகேடு தொடர்பாக யாரும் கேள்வி எழுப்பாததால் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. 

Next Story