அரியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர்கள் 2 பேர் பலி


அரியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 18 March 2018 3:45 AM IST (Updated: 18 March 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வடமாநில வாலிபர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தாமரைக்குளம்,

ஒடிசா மாநிலம் நியூபடா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிரிதாரிபர்வா (வயது 21), முரளிசவார் (18), கைலாசவார் (18) மற்றும் பஜ்மன்மாஜி (18). இவர்கள், அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளத்தில் இயங்கி வரும், செங்கல் தயாரிக்கும் சூலையில், தொழிலாளர்களாக பணியாற்றினர். அந்த 4 பேரும் நேற்று இரவு, தவுத்தாய்குளம் காலனி அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு அடையாளம் தெரியாத வாகனம் அந்த 4 பேர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கிரிதாரிபர்வா, முரளிசவார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். கைலாசவார் படுகாயத்துடனும், பஜ்மன்மாஜி லேசான காயத்துடனும் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

சிமெண்டு ஆலை லாரி மோதியதா?

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சம்பவ இடத்திற்கு மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், அரியலூர் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே விபத்தில் இறந்த கிரிதாரிபர்வா, முரளிசவார் ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும், அதன் டிரைவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத வாகனம், சிமெண்டு ஆலை லாரியாக இருக்கலாமா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டத்தில் அதிகளவில் சிமெண்டு ஆலைக்கு லாரிகள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், இதனை தடுக்க லாரிகள் செல்வதற்கென தனியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story