சட்டசபையில் 26-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்: கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்


சட்டசபையில் 26-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்: கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்
x
தினத்தந்தி 18 March 2018 4:30 AM IST (Updated: 18 March 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வருகிற 26-ந்தேதி சட்டசபை கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார். இடைக்கால பட்ஜெட்டை முதல்- அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்காக வருகிற 26-ந் தேதி காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. பொதுவாக ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் கவர்னரின் உரை இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு கவர்னர் உரை இடம் பெறவில்லை. இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்.

இதைத்தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசின் 3 மாத செலவினங்களுக்கு சபையின் அனுமதி கேட்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 27, 28-ந் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு புதுச்சேரி அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தில் இருந்தது. ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக புதுச்சேரியில் அமைச்சருக்கும், கவர்னருக்கும் சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கவர்னருக்கு முக்கியத்துவம் அளித்து அவரது உரை இடம் பெறும் என்று கூறப் படுகிறது.

Next Story