லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு


லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 18 March 2018 4:15 AM IST (Updated: 18 March 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூர் எஸ்டேட்டில் லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

அம்பத்தூர்,

சென்னை அம்பத்தூர் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது20). இவர், பட்டாபிராம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை விக்னேஷ் அம்பத்தூர் எஸ்டேட் 3-வது பிரதான சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லாரி டிரைவரான ஆவடியை சேர்ந்த பிரகாஷ்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரபாத்(26). இவர், போரூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் கள்ளிக்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அம்பத்தூர் கலைவாணர் நகர் திருப்பதி குடை சாலையில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த பிரபாத், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

சென்னை திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(48). சொந்தமாக லோடு வேன் வைத்து ஓட்டி வருகிறார். நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அம்பத்தூர் வழியாக லோடு வேனில் சென்றார். அந்த லோடு வேனில் காய்கறி வியாபாரிகளான பச்சையம்மாள்(39), இந்திரா(30) உள்பட 11 பேரும் சென்றனர்.

அம்பத்தூர் உழவர் சந்தை அருகே வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லோடு வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த டிரைவர் உள்பட 12 பேரும் லேசான காயம் அடைந்தனர். அனைவரும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த 3 விபத்துகள் குறித்தும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story