விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: பல்லடத்தில் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: பல்லடத்தில்  அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2018 3:30 AM IST (Updated: 18 March 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பல்லடம், 

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனம் ஆகியவை சேர்ந்து விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைத்துவருவதை விவசாயிகள் கண்டித்து வருகிறார்கள். அத்துடன் கேபிள்களை பூமிக்கு அடியில் பதித்து அதன்மூலம் உயர் அழுத்த மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள கொசவம்பாளையம் சாலையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஏர் முனை இளைஞர் அணி மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் கொங்கு எம்.ராஜாமணி தலைமைதாங்கினார்.

வாவிபாளையம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் பார்த்தசாரதி வரவேற்று பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை அடக்கி நிலங்களை எடுக்க நினைக்கிறது. தமிழகம் முழுவதும் விவசாயிகள் கடன் பிரச்சினை, வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நெருக்கடியில் உள்ளனர். பல ஏக்கர் நிலங்களை இழந்து விவசாயிகள் இன்று குறுகிய இடத்தில் விவசாயம் செய்துவருகிறார்கள். வனப்பகுதி, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்க அரசு தயங்கி வருகிறது. விலங்குகளுக்கு உள்ள மரியாதை கூட விவசாயிகளுக்கு இல்லை. எனவே இதற்கு மாற்றாக கேபிள் பதித்து மின்சாரத்தை கொண்டுசெல்ல வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து, கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்க செயல்தலைவர் என்.எஸ்.பி.வெற்றி, ம.தி.மு.க. மாநில பொருளாளர் சி.கணேசமூர்த்தி, த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் தங்கராஜ், கள் இயக்க தலைவர் செல்லசாமி, பி.ஏ.பி. திட்டக்குழு உறுப்பினர் டி.கோபால், கொ.ம.தே.க. திருப்பூர் மேற்குமாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தி.மு.க. மாவட்ட தலைவர் திருமூர்த்தி, பல்லடம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., உ.உ.க., கம்யூனிஸ்டு கட்சியினர், கள் இயக்கம், மற்றும் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story