காங்கிரஸ் அரசு எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை எடியூரப்பா உண்மை பேசுவதே இல்லை முதல்-மந்திரி சித்தராமையா தாக்கு


காங்கிரஸ் அரசு எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை எடியூரப்பா உண்மை பேசுவதே இல்லை முதல்-மந்திரி சித்தராமையா தாக்கு
x
தினத்தந்தி 18 March 2018 3:48 AM IST (Updated: 18 March 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

எடியூரப்பா உண்மை பேசுவதே இல்லை என்றும், காங்கிரஸ் அரசு எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என்றும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

எடியூரப்பா உண்மை பேசுவதே இல்லை என்றும், காங்கிரஸ் அரசு எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என்றும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

முக்கியமான தகவலை பதிவிடவில்லை

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் மாலையில் முக்கியமான தகவலை வெளியிடப்போவதாக கூறி கடந்த 15-ந் தேதி குறிப்பிட்டு இருந்தார். இதனால் காங்கிரஸ் அரசு மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டை அவர் வெளியிடலாம் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் எடியூரப்பா எந்த ஒரு முக்கியமான தகவலையும் பதிவிடவில்லை.

இதுகுறித்து டெல்லியில் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து சித்தராமையா கூறியதாவது:-

உண்மை பேசுவதே இல்லை

எடியூரப்பா இதற்கு முன்பு அரசு மீது பெரிய ஊழல் குற்றச்சாட்டை கூறப்போவதாகவும், அதற்கான ஆதாரங்களை வெளியிடப்போவதாகவும் கூறினார். ஆனால் அவர் வெளியிடவில்லை. தற்போதும் அதையே தான் எடியூரப்பா செய்திருக்கிறார். காங்கிரஸ் அரசு எந்த ஒரு ஊழலிலும் ஈடுபடவில்லை. அவ்வாறு ஈடுபட்டால் தானே அரசு மீது குற்றச்சாட்டு கூறி, அதற்கான ஆதாரங்களை எடியூரப்பாவால் வெளியிட முடியும். எந்த ஒரு முறைகேடுகளும் நடைபெறாத பட்சத்தில், அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பா.ஜனதாவினர் கூறி வருகிறார்கள். அவர்கள் சொல்வதை மக்கள் நம்பமாட்டார்கள்.

எடியூரப்பா பொய் பேசுபவர். அவர் உண்மை பேசுவதே இல்லை. எடியூரப்பா உள்பட பா.ஜனதாவினர் வாயில் இருந்து வருவது எல்லாம் பொய் மட்டுமே. பா.ஜனதாவினர் சொல்வது ஒன்று, செய்வது மற்றொன்றாக தான் இருக்கும். காங்கிரஸ் கட்சி சொல்வதை மட்டுமே செய்யும். தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story