லாரி மீது கார் மோதி 3 என்ஜினீயர்கள் உள்பட 4 பேர் பலி


லாரி மீது கார் மோதி 3 என்ஜினீயர்கள் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 18 March 2018 5:00 AM IST (Updated: 18 March 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி நொறுங்கியது. இதில் காரில் இருந்த 3 என்ஜினீயர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.

கல்பாக்கம்,

கோவையை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது 25). இவர் சென்னை பூந்தமல்லியை அடுத்த கந்தன்சாவடியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் என்ஜினீயர்களான பரத் (22), ஆந்திராவை சேர்ந்த மெகா (25), கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா (22), அகிலா (25) மற்றும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர் கைலாசம்பாளையத்தை சேர்ந்த செங்கோட்டுவேல் என்பவரின் மகன் பிரசாத்குமார் (22) ஆகியோருடன் விடுமுறையை கழிப்பதற்காக காரில் புதுச்சேரிக்கு சென்றார்.

புதுச்சேரியில் இருந்து நேற்று அதிகாலை 6 பேரும் காரில் புறப்பட்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தனர். காரை தீபன் சக்கரவர்த்தி ஓட்டினார். மதுராந்தகத்தை அடுத்த படாளம் அருகே உள்ள கொளம்பாக்கத்தில் கார் வந்துகொண்டிருந்தது. அப்போது சாலையோரம் பழுதாகி நின்றுகொண்டிருந்த ஒரு லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். தீபன் சக்கரவர்த்தி, ஐஸ்வர்யா, பிரசாத்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காருக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மெகா, பரத், அகிலா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மெகா உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் பலியான பிரசாத்குமார், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும் அவர் மருத்துவ உயர்படிப்புக்கு வழிகாட்டி சிறப்பு பயிற்சி வகுப்புக்கு செல்வதற்காக சென்னையில் நண்பர்களுடன் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில், நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது அவர் விபத்தில் பலியாகி உள்ளார்.

Next Story