9 நாளில் கூட பணி இடமாற்றம் செய்யப்படுவார்கள் அரசை விட அதிகாரிகள் பெரியவர்கள் அல்ல


9 நாளில் கூட பணி இடமாற்றம் செய்யப்படுவார்கள் அரசை விட அதிகாரிகள் பெரியவர்கள் அல்ல
x
தினத்தந்தி 18 March 2018 3:58 AM IST (Updated: 18 March 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

அரசை விட அதிகாரிகள் பெரியவர்கள் அல்ல என்றும், அவர்கள் 9 நாளில் கூட பணி இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி பசவராஜ் ராயரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

அரசை விட அதிகாரிகள் பெரியவர்கள் அல்ல என்றும், அவர்கள் 9 நாளில் கூட பணி இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி பசவராஜ் ராயரெட்டி தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் பணி இடமாற்றம்

கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை அரசு தொடர்ந்து பணி இடமாற்றம் செய்து வருகிறது. இதற்கு பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணி இடமாற்றம் குறித்து கொப்பலில் நேற்று மந்திரி பசவராஜ் ராயரெட்டியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

அரசை விட அதிகாரிகள், பெரியவர்கள் அல்ல


அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணி இடமாற்றத்தில் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது. அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள், இந்த மாவட்டத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறைகள் இல்லை. அவர்களை அரசு எங்கு பணியில் அமர்த்துகிறதோ, அங்கு சென்று அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மேலிருந்தா? வந்துள்ளனர். அரசை விட அதிகாரிகள் பெரியவர்கள் அல்ல. போலீஸ் சூப்பிரண்டு அனுப் ஷெட்டி 9 மாதத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறித்து நீங்கள்(நிருபர்கள்) கேட்கிறீர்கள்.

அதிகாரிகளை நீங்கள் தான் தேவையில்லாமல் கதாநாயகர்கள் ஆக்குகிறீர்கள். அதிகாரிகள் 9 மாதத்தில் அல்ல, 9 நாளில் கூட பணி இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதிகாரிகளை இடமாற்றம் செய்வது அரசின் முடிவாகும். அதிகாரிகள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று பார்த்து பணி இடமாற்றம் செய்யப்படுவதில்லை. நேர்மையான அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர். கெட்ட அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். தவறு செய்பவர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. பணி இடமாற்றத்திற்கு எதிராக அதிகாரிகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிடவும் சட்டத்தில் அனுமதி உள்ளது.

இவ்வாறு மந்திரி பசவராஜ் ராயரெட்டி கூறினார்.

Next Story