புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பலத்த மழை: 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையில் 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
புஞ்சைபுளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் மழை தூற தொடங்கியது. மதியம் 3 மணி வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. அதன்பின்னர் பலத்த மழையாக மாறியது. இந்த மழை 4 மணி வரை நீடித்தது. இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பனையம்பள்ளி, புங்கம்பள்ளி, பருசம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. ரோடுகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழைவெள்ளம் பருசம்பாளையத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. மேலும் அருகே உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தபடி நின்றது. உடனே பொதுமக்கள் வீடுகளுக்கு புகுந்த மழைவெள்ளத்தை பாத்திரங்கள் மூலம் இறைத்து வெளியேற்றினார்கள். கோவிலில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தினார்கள்.
இதேபோல் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் நேற்று மதியம் 1.45 மணி முதல் மழை 2 மணி வரை பலத்த மழை நீடித்தது. திம்பம் மலைப்பாதை 10-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து ஆசனூர் வரையும் பலத்த மழை கொட்டியது. இதனால் திம்பம் மலைப்பாதையில் இருள் சூழ்ந்திருந்தது. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றார்கள்.
மேலும் அந்தியூர் அருகே உள்ள பர்கூர், தட்டக்கரை, தாளக்கரை, ஊசிமலை, துருசனாம்பாளையம், மடம், மணியாச்சி ஆகிய பகுதிகளிலும் நேற்று மதியம் 3.30 மணி முதல் 4.30 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வனக்குட்டைகள் நிரம்பி வருகின்றன. சிவகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.
Related Tags :
Next Story