அமெரிக்காவுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது


அமெரிக்காவுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது
x
தினத்தந்தி 18 March 2018 4:21 AM IST (Updated: 18 March 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்துவதால் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது என்று இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

சேலம்,

சேலம் அம்மாபேட்டை ஏ.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் சாதனையாளர்கள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஏ.வி.எஸ். மற்றும் சக்திகைலாஷ் கல்வி நிறுவனங்களின் தலைவர் கைலாசம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ராஜவிநாயகம், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பெங்களூரு இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

சாதனையாளராக உருவாகுவதற்கு ஏழ்மையோ, ஆண், பெண் பாகுபாடோ, சாதியோ, மதமோ, மொழியோ தடை கிடையாது. தாய்மொழியில் நன்கு படித்து தேர்ச்சி பெற்றால் கூட மாணவர்கள் சாதனைகள் படைக்கலாம். இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால், அதனை பெறக்கூடிய தகுதியான நபர்கள் தான் கிடைப்பதில்லை.

நாம் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள் என்ற எண்ணம் நமக்குள் இருக்க வேண்டும். நமக்கான சம்பளத்தை நாமே நிர்ணயிக்கும் அளவுக்கு நமது தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் என்னவாக போகிறோம் என்று மாணவ பருவத்திலேயே நாம் முடிவு எடுக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்காக எங்களால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறோம். நீங்களும் உங்களால் முடிந்ததை நாட்டுக்கு செய்ய வேண்டும்.

அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் சிறந்த இடங்களை அடைவதற்கு என்ஜினீயர்களே முக்கிய காரணம். மாணவர்களாகிய நீங்கள் செய்யும் சாதனைகளை பாராட்டவும், உங்களை ஊக்கப்படுத்தவும், இந்த நாடும், சமூகமும் தயாராக உள்ளது. முதலில் நீங்கள் யாரென உணருங்கள். அப்போது தான் உங்களால் பல சாதனைகளை படைக்க முடியும். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

இதைத்தொடர்ந்து இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த மாதம் இறுதியில் ஜி சாட்-6ஏ செயற்கை கோள் விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம். அடுத்ததாக மேலும் சில செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் சென்ற 10 கிலோ எடை கொண்ட நானோ செயற்கை கோள் உள்பட ஏற்கனவே அனுப்பப்பட்ட மூன்று செயற்கோள்களும் சிறப்பாக செயல்படுகின்றன. செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்துவதால் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது.

விண்வெளி துறையில் நமக்காக செயற்கைகோள் தயாரித்து வருகிறோம். அதேபோல், பிறருக்கும் தயாரித்து வழங்கி வருகின்றோம்.

விவசாயத்தில் தன்னிறைவு பெற்றது போல் தொழில்நுட்ப துறையிலும், மோட்டார் உற்பத்தியிலும் தன்னிறைவு பெற்று வருகிறோம். இதுபோன்ற மற்ற துறையிலும் தன்னிறைவு பெற்றுள்ளோம். மீனவர்களின் நலனுக்காக புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்று இந்த கருவி மூலம் கண்காணிக்க முடியும். கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும்போது மீனவர்கள் இந்த கருவியை எடுத்து செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story