நடப்பு ஆண்டில் 5½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


நடப்பு ஆண்டில் 5½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 18 March 2018 3:00 AM IST (Updated: 18 March 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு ஆண்டில் 5½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு, 

பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழைகளே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே எனது லட்சியம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார். ஏழைகளே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க கல்வித்துறையால் மட்டுமே முடியும் என்பதால் தான் கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு ரூ.27 ஆயிரத்து 250 கோடியே 33 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவ -மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் அட்டவணை வழங்கப்பட்டு உள்ளது.

அந்த அட்டவணையில் உயர்நிலை பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் மேல்நிலை பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் போது எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிப்பது என்பது குறித்தும், மேல்நிலை பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்லூரி செல்லும் போது வேலைவாய்ப்பை தரக்கூடிய எந்த கல்வியை கற்கலாம் என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் மாணவ -மாணவிகள் குழப்பமின்றி தாங்கள் விரும்பும் படிப்புகளை படிக்கலாம்.

மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்காக 412 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு பிளஸ்-2 முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கென்று சிறப்பு தனித்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதில் வெற்றி பெறும் 4 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 8 கல்லூரிகளில் 25 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகள் குறித்து தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில் மாணவ, மாணவிகளுக்கு 3 வகையான வண்ண சீருடைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பள்ளிக்கல்வி துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறை பயிற்சி வழங்கப்பட்டு, சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஒரு நாட்டினுடைய வளர்ச்சி மாணவர்கள் கையில் தான் உள்ளது. மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி தமிழ்நாட்டில் 272 பாடப்பிரிவுகள் உள்ளன. இவற்றை மாணவர்கள் படிக்கின்ற போது தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலமாக விளங்கும்.

இவ்வாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Next Story