கன்னங்குறிச்சி மூக்கனேரியில் மூழ்கி வாலிபர் சாவு


கன்னங்குறிச்சி மூக்கனேரியில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 18 March 2018 4:56 AM IST (Updated: 18 March 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

நண்பருடன் குளித்தபோது கன்னங்குறிச்சி மூக்கனேரியில் மூழ்கி வாலிபர் சாவு

கன்னங்குறிச்சி,

சேலம் மணக்காடு அன்பு நகரை சேர்ந்தவர்கள் பிரேம், சிகாமணி மற்றும் பாலாஜி(வயது20). இவர்கள் மூவரும் நண்பர்கள். இவர்களில் பாலாஜி பிளஸ்-2 முடித்து உள்ளார். தற்போது தனியார் செல்போன் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை நண்பர்கள் மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏற்காடுக்கு இயற்கை அழகை ரசிக்க சென்றனர். பின்னர் மூவரும் மது குடித்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் பிரேம், பாலாஜி, சிகாமணி ஆகிய மூவரும் மாலை 6 மணிக்கு கன்னங்குறிச்சி மூக்கனேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பாலாஜியும், சிகாமணியும் மூக்கனேரியில் குளித்தனர். அங்கு பிரேம் குளிக்க மறுத்து ஏரிக்கரையில் நின்று கொண்டார். அப்போது அங்கிருந்தவர்கள் ஏரியில் குளிக்க வேண்டாம் என்று தடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பாலாஜி ஏரியில் உள்ள சகதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். நண்பரை காப்பாற்றும் முயற்சியில் சிகாமணி ஈடுபட்டும் முடியவில்லை.

இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கண்ணன் மற்றும் போலீசார் ஏரிக்கு விரைந்தனர். மேலும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கிய பாலாஜியை 3 பரிசல்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஏரியில் பொதுமக்களும் இரவு நேரத்தில் திரண்டனர். இரவு 10 மணிக்கு பாலாஜி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் பாலாஜி உடலை போலீசார் கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Next Story