பெண்களுக்காக நடந்து செல்லும் ஸ்ரீஸ்தி


பெண்களுக்காக நடந்து செல்லும் ஸ்ரீஸ்தி
x
தினத்தந்தி 18 March 2018 8:45 AM GMT (Updated: 18 March 2018 7:32 AM GMT)

பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி நடந்துகொண்டிருக்கிறார், ஸ்ரீஸ்தி பாக்ஷி.

ஸ்ரீஸ்தி பாக்ஷி எம்.பி.ஏ. படித்தவர். ஹாங்காங்கில் உயர்ந்த சம்பளத்தில் வேலைபார்த்தவர். அங்குதான் கணவருடன் வசித்து வந்தார்.

2016-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் தாயையும், மகளையும் ஒரு கும்பல் காரில் இருந்து வெளியே இழுத்து கற்பழித்த கொடூரமான சம்பவம் நடந்தது. அது ஸ்ரீஸ்தி மனதில் பெருங்கவலையை ஏற்படுத்திவிட்டது. உடனே தான் பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வந்து ‘கிராஸ் போவ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்பது இந்த அமைப்பின் நோக்கம்.

‘‘பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக இந்தியா இல்லை என்பது என் எண்ணம். பெண் களுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும்போது எனக்குள் கடும் கோபம் வெளிப்படும். பெண் களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். சமூக சேவையில் ஈடுபடுவது பற்றிய அனுபவம் எதுவும் எனக்கு இல்லை. இந்தியா திரும்பி வந்து என் குடும்பத்தினர், நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினேன். நான் ராணுவ குடும்ப பின்னணியை கொண்டவள். என் கணவரும், பெற்றோரும் எனக்கு ஆதரவாக இருந்தனர்’’ என்கிறார்.

ஸ்ரீஸ்தி பெண்களின் பாதுகாப்பிற்கான நடைபயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாக முதலில் உடற்பயிற்சி மேற்கொண்டார். தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் செய்தார். உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் தன்னை தயார்படுத்தியிருக்கிறார்.

‘‘சமூக சேவையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களை சந்தித்து பேசினேன். ஏராளமான ஆராய்ச்சிகளும் மேற்கொண்டேன். என் தந்தையுடன் அமர்ந்து இந்திய வரைபடத்தை ஆராய்ந்து பயண திட்டங்களை வகுத்தேன்’’ என்கிறார்.

ஸ்ரீஸ்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி கன்னியாகுமரியில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை நடைபயணமாகவே கடந்துவிட்டார். தற்போது டெல்லியை கடந்து இவருடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தினமும் 25 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் கடப்பதை இலக்காக நிர்ணயித்து இருக்கிறார். வெறுமனே நடை பயணமாக அமைந்துவிடாமல் ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம்களை நடத்து கிறார். பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளை சந்தித்து பெண்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் நடத்துகிறார்.

‘‘பெண்களை மையப்படுத்தி மட்டுமே கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துவதில்லை. ஆண்களும் இளைஞர்களும் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அழைத்து பேசினால்தான் பெண்களுக்கான அதிகாரமளிப்பது பற்றி விவாதிக்கமுடியும் என்று கருதுகிறேன். அதேவேளையில் ஆண், பெண் இருவருக்கும் இடையே பாலின இடைவெளி அவசியமானது’’ என்கிறார்.

தனது பயண அனுபவம் பல கசப்பூட்டும் உண்மைகளை அறிந்துகொள்ள உதவியிருப்பதாக கூறுகிறார்.

‘‘நான் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களை சந்தித்து பேசுகிறேன். அவர்களுடைய பிரச்சினைகளை பற்றி விவாதிப்பதற்கும், தீர்வு காண முயற்சிப்பதற்கும் நிறைய மன வலிமை தேவைப்படுகிறது. சில சமயங்களில் அவர்களுடைய வேதனையை கேட்கும்போது எனது நடை தளர்ந்துபோய்விடுகிறது. மிகவும் சோர்வாகி விடுகிறேன். இரவில் ஓய்வெடுத்து மறுநாள் காலை என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு பயணத்தை தொடருகிறேன்’’ என் கிறார்.

‘‘நிறைய இடங்களில் மக்களின் அன்பும், ஆதரவும் மனப்பூர்வமாக கிடைத்திருக்கிறது. இதுவரை 25 ஆயிரம் பேரை சந்தித்திருக்கிறேன். உள்ளூர் மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் உற்சாகம் ஸ்ரீநகர் வரையிலான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய வைத்துவிடும் என்று நம்புகிறேன். என்னை போன்றவர்கள் விதைக்கும் விதை காலப்போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என் கிறார்.

Next Story