காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிற்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிற்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 March 2018 4:15 AM IST (Updated: 19 March 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

கிருஷ்ணகிரி,

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில், உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் தண்ணீரை குறைத்தது வருத்தம் அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொன்னது நம்பிக்கை அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கர்நாடக அரசியல் கட்சிகள், நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும்படி செய்கின்றனர். மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழங்கப்பட்ட நேரத்தில் இன்னும் இரண்டு வாரம் மட்டுமே உள்ளது. எனவே, இந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த விதத்தில் அழுத்தம் கொடுக்கலாம் என்பதை தீர்க்கமாக தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும். வேண்டுமென்றால் மீண்டும் ஒருமுறை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்க வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே அனைத்து கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்ற ஆர்வம் அரசுக்கு உள்ளது என்று அர்த்தம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தேனி மாவட்டம் குரங்கணி மலை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் ஒருவர் வீதம் பலியாக வருகின்றனர். இந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு அறிவித்த இழப்பீடு போதுமானதாக இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி, கமலுக்கு மக்கள் மத்தியில் எழுச்சியில்லை. சினிமா நடிகர்களை பார்க்க கூட்டம் கூடத்தான் செய்யும். சேலத்திற்கு வந்த நயன்தாராவை பார்க்க கூடிய கூட்டம் யாருக்கும் கூடவில்லை. அதை நம்பி யாரும் அரசியலில் இறங்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் வஜ்ஜிரவேல், மேற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், மேற்கு மாவட்ட தலைவர் வேலுசாமி, கிழக்கு மாவட்ட துணை செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசோகன், மாநில இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தி, மாநில துணை பொதுச்செயலாளர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story