மக்கள் பணியை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் கட்சி தொடங்குகிறார்கள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு


மக்கள் பணியை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் கட்சி தொடங்குகிறார்கள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 19 March 2018 4:15 AM IST (Updated: 19 March 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் பணி என்றால் என்ன என்று தெரியாதவர்கள் எல்லாம் கட்சி தொடங்குகிறார்கள் என விருதுநகரில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

விருதுநகர்,

விருதுநகர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகரில் நடந்தது. இதில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசிய தாவது:– எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாழ்கையை தொடங்கிய காலத்தில் இருந்தே மக்கள் பணியாற்றி வந்தார். மக்களுடன் நெருக்கமாக பழகி அவர்களது தேவைகளை அறிந்து தொண்டாற்றினார். மக்கள் பணியாற்றிய எம்.ஜி.ஆர். எங்கே, மக்கள் பணி என்றால் என்னவென்றே தெரியாத கமல்ஹாசன் எங்கே. மக்கள் பணி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் தற்போது கட்சி தொடங்குகின்றனர். எம்.ஜி.ஆர். உடலில் குண்டுகள் துளைத்த நேரத்தில் அவர் சிகிச்சையில் இருந்த போது அவரது புகைப்படத்தை வைத்து ஓட்டு கேட்டு அண்ணா முதலமைச்சரானார் என்பது தான் வரலாறு. ஒன்றுமே செய்யாமல் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்து விடலாம் என்று சிலர் கனவு காண்பது கானல் நீராகிவிடும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியையும், ஆட்சியையும் தங்களது கரங்களில் கட்டுப்பாட்டில் கச்சிதமாக வைத்துள்ளனர். இன்று கூட்டம் கூட்டுவது என்பது யாராலும் முடியும். விருதுநகரில் உள்ள தொழிலதிபர் கூட தன்னிடத்தில் உள்ள பணத்தை கொண்டு கூட்டத்தை கூட்டி விடலாம். அடிமட்ட தொண்டன் சாதாரண ஏழை, எளிய மக்களின் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து வாழ்க என்ற கோ‌ஷம் இரட்டை இலைக்குத்தான் கிடைக்கும். ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. இந்த இயக்கத்திற்கு அழிவு என்பதே இல்லை.

காவிரி பிரச்சனையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றார். காவிரி பிரச்சனையில் ஒரு துரும்பைக்கூட கிள்ளி போடாதவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் தி.மு.க. நாடகமாடுகிறது. தி.மு.க.வை மக்கள் வெறுத்து விட்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டு போவது தான் அவர்களுக்கும் நல்லது. பொது மக்களுக்கும் நல்லது. கட்சியில் எந்த பிரச்சனை இருந்தாலும் அ.தி.மு.க. தொண்டன் தி.மு.க.வுக்கு செல்ல மாட்டான். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நினைவாக்க அடுத்த வரவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலிலும் மற்றுமுள்ள தேர்தலிலும் அ.தி.மு.க. சாதனை வெற்றி கொள்ள ஒன்று பட்டு உழைப்போம். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் விருதுநகர் நகர செயலாளர் முகமது நயினார், ஒன்றிய செயலாளர் மூக்கையா, கூட்டுறவு மொத்த பண்டகசாலை தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story