கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்: 86 பேருக்கு பணிநியமன ஆணை
கடலூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 86 பேருக்கு பணிநியமன ஆணையை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள் வந்திருந்தனர்.
பின்னர் அவர்கள் தங்கள் பெயர்களை பதிவுசெய்துவிட்டு தங்கள் தகுதிக்கு ஏற்ற நிறுவனத்தை நாடி சென்றனர். அங்கு நிறுவன ஊழியர்கள் நேர்காணல் நடத்தி தகுதியான இளைஞர் மற்றும் இளம்பெண்களை தேர்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து காலை 11.30 மணி வரை தேர்வு செய்யப்பட்ட 86 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குனர் கருணாகரன் வரவேற்றார்.
கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கினார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 86 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
இதனை தொடர்ந்து மாலை வரை நடைபெற்ற முகாமில் 92 தனியார் நிறுவனங்கள் பங்குபெற்றன. முகாமில் 3 ஆயிரத்து 246 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 1,186 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதில் நகராட்சி ஆணையர் சரவணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் தனலட்சுமி, லாவண்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், மாவட்ட தொழில்மைய உதவி இயக்குனர் லட்சுமி, செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் பீட்டர் ராஜேந்திரம், நகரசபை முன்னாள் தலைவர் குமரன், துணை தலைவர் சேவல்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் அன்பு, கந்தன், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story