கோவையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
கோவையில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக் கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 216 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்ததுடன் 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய சில கல்லூரி மாணவர்களையே வியாபாரிகளாக மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா விற்பனை செய்யும் கல்லூரி மாணவர்களை பிடிக்க போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கோவை–அவினாசி ரோட்டில் உள்ள நவஇந்தியா அருகில் சிலர் கல்லூரி மாணவர் களுக்கு கஞ்சா விற்பதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசா£ விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காருக்குள் இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் காரை சோதனையிட்ட போது உள்ளே கஞ்சா இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதில், அவர்கள் கோவையை சேர்ந்த ஹரீஸ் கிஷோர் (வயது 23), அருண்குமார் (22) என்பதும் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு பிடித்து வருவதும், அவர்கள், கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அந்த காருக்குள் இருந்த 2¾ கிலோ கஞ்சா மற்றும் அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கஞ்சா வியாபாரிகளான வீரகேரளத்தை சேர்ந்த சக்திவேல், சந்தோஷ்குமார், சுரேஷ்குமார் ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறும்போது, ‘கஞ்சா வியாபாரிகள் மாணவர்களை குறிவைத்து செயல்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். அத்துடன் மாணவர்கள் மத்தியில் போதை மருந்து தடுப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களை தேடி வருகிறோம்’ என்றனர்