காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது - தமிழிசை சவுந்தரராஜன்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது - தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 19 March 2018 4:30 AM IST (Updated: 19 March 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கோவை,

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது–

வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் கருத்து தெரிவிப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைவதை மறைக்கவே காங்கிரஸ் இதுபோன்று கூறுகிறது. தொழில்நுட்ப காலத்தில் காங்கிரஸ் நாட்டை பின்னோக்கி அழைக்கிறது. ஜனநாயக முறைப்படி மக்கள் செலுத்திய வாக்கை காங்கிரஸ் கொச்சைப்படுத்தி வருகிறது.

பாரதீய ஜனதா தூண்டுதலின் பேரில்தான் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டார் என கூறி வருகிறார்கள். பாரதீய ஜனதா மீது வேண்டும் என்றே தொடர்ந்து இது போன்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முடிவுகளை மு.க.ஸ்டாலின் தான் எடுக்கிறார் என்று சொல்ல முடியுமா? அந்தந்த கட்சி செயல்பாடுகளில் அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். இதில் பாரதீய ஜனதா தலையிடாது.

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காவிரியை வைத்து அரசியல் செய்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக பாரதீய ஜனதாவும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு பாரதீய ஜனதாவுக்கு எதிராக நடத்தும் கூட்டம் பாரதீய ஜனதாவை எந்த வகையிலும் பாதிக்காது. பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சி ஆகும். பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் வலுவான ஆதரவுடன் பாரதீய ஜனதா உள்ளது.

சந்திரபாபு நாயுடு உள்பட எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அதில் வெற்றி பெறுவோம். பாரதீய ஜனதாவுக்கு பெரும்பான்மை இருப்பதால் இது எந்த வகையிலும் பாதிக்காது.

தென் மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது. போதுமான நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கொடுத்து வருகிறது. மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென் மாநிலங்கள் தொடர்ந்து புறக் கணிக்கப்பட்டு வருவதாக கூறும் குற்றச்சாட்டை மறுக்கிறோம்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலதாமதம் செய்வது சரியல்ல. உள்ளாட்சி பகுதிகளில் அடிப்படை பணிகள் நடைபெறாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். தமிழகத்தில் உடனே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். அரசு பஸ்களில் போலி டிக்கெட் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறுவதாக கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற மோசடிகளை தடுக்க எலெக்ட்ரானிக் கருவிகள் மூலம் டிக்கெட் வழங்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் வாக்குப்பதிவுக்கு எந்திரத்தை பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். இது சரியா?

ராணுவ உடை தயாரிக்கும் தொழிற்சாலை சென்னையில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை மூடப்படாது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். அதன் பிறகும் சில கட்சிகள் போராட்டம் நடத்தி வருவது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ‘சிப்’ வைத்து உள்ளார்கள் என டி.ராஜேந்தர் குற்றம் சாட்டி உள்ளாரே?’ என்ற கேள்விக்கு, ‘அவர் மனம் போன போக்கில் எதுகை மோனையில் பேசுகிறார். ஆள் ஆளுக்கு சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்ல முடியாது’ என்றார்.


Next Story