பாரதீய ஜனதாவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்


பாரதீய ஜனதாவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 March 2018 3:45 AM IST (Updated: 19 March 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் பாரதீய ஜனதாவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் அனைத்து மத மக்களும் ஒற்றுமையுடன் வசித்து வருகின்றனர். இதனால் இந்து மதத்தை வெறியாக கொண்டுள்ள பாரதீய ஜனதாவால் புதுச்சேரியில் கால் ஊன்ற முடியவில்லை. இந்த நிலையில் மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தது முதல் புதுச்சேரியில் பாரதீய ஜனதாவை வளர்க்க கவர்னர் துணையுடன் பாரதீய ஜனதாவினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

அதற்கு அமைதியான முறையில் செல்லாமல் கலவரங்களை தூண்டும் வகையில் செயல்படுவதுதான் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. இதற்கு பாரதீய ஜனதாவை எதிர்க்கும் சக்திகள் அனைவரும் ஒன்றிணைவது அவசியமாக உள்ளது. ஏற்கனவே பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா வைரமுத்துவை இழிவாக பேசியதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காவல்துறையில் அனுமதிபெற்று நடத்திய போராட்டத்தின்போது திடீரென அங்கு வந்த இந்து முன்னணி, பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள் ரகளை செய்து ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை பாதியில் நிறுத்தம் செய்தனர்.

இப்போது வில்லியனூரில் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்திலும் பாரதீய ஜனதா கட்சியினர் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசாரும் எந்தவித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற நிலைக்கு பாரதீய ஜனதாவை எதிர்ப்பதற்கு ஒற்றுமை இல்லாததே காரணம். எனவே இவ்விஷயத்தில் பாரதீய ஜனதாவுக்கு எதிர் கருத்து உடையவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகி உள்ளது.

காவல்துறையில் அனுமதிபெற்று நடத்திய பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ரகளையை தடுக்காமல் அமைதிகாத்த ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற அடிப்படை உரிமையான இயக்கங்களின் ஜனநாயக ரீதியிலான கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முருகானந்தம் கூறியுள்ளார். 

Next Story