மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு ரூ.21¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு ரூ.21¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 19 March 2018 4:15 AM IST (Updated: 19 March 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

மணப்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.21¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். முகாமில் சிறப்பு விருந்தினராக ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

இந்த முகாமில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.70 ஆயிரத்து 500 மதிப்பில் உதவித்தொகையும், வருவாய்த்துறையின் சார்பில், 87 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் நத்தம் மற்றும் வீட்டுமனை பட்டாக்களையும், 4 பயனாளிகளுக்கு வாரிசு சான்றுகளையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு ரூ.20 ஆயிரத்து 820 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்து 925 மதிப்பில் விவசாய கடன் மற்றும் மாற்றுத்திறனாளி கடனுதவிகளையும் என மொத்தம் 165 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 435 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:- மணப்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமிற்கு முன்னதாக பொதுமக்களிடமிருந்து 90 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 76 கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முகாமில், வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புதுறை, செய்தித்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பாக பொதுமக்களுக்கு திட்ட விளக்கி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் தொடர்பு முகாம் 15 நாட்களுக்கு முன்னரே இப்பகுதி மக்களின் கோரிக்கை மனுக்கள் பெற்று, அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்று மக்கள் தொடர்பு முகாம்களில் பொதுமக்கள் திரளாக அரசின் நலத்திட்ட உதவிகளை கிராமப்புற மக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று கூறினார்.

இந்த முகாமில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயராணி, மாவட்ட துணைப்பதிவாளர் (பொது வினியோகத்திட்டம்) செல்வராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். 

Next Story