சேலம் பெரமனூர் டாஸ்மாக் கடையில் இருந்து ரூ.2 லட்சம் மதுபாட்டில்களை ஆட்டோவில் ஏற்றிச்சென்றதால் பரபரப்பு
சேலம் பெரமனூர் டாஸ்மாக் கடையில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை ஆட்டோவில் ஏற்றிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசின் விதிமுறையை மீறி டாஸ்மாக் கடையில் மது விற்பனை நடப்பதாக மதுபிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலம்,
சேலம் பெரமனூர் மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை வழக்கம்போல் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டது. அதன்பிறகு மதுவிற்பனையில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். அப்போது, சிறிது நேரத்தில் சந்தியூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து இந்த கடைக்கு லாரியில் மதுபாட்டில்கள் வந்தன.
பின்னர், மதுக்கடையை ஒட்டியுள்ள மற்றொரு கடையில் லாரியில் இருந்து மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக இறக்கி அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. எவ்வளவு மதுபாட்டில்கள் வந்துள்ளது? என்று டாஸ்மாக் ஊழியர்களும் கணக்கெடுத்தனர். அதன்பிறகு அங்கிருந்து அந்த லாரி புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் டாஸ்மாக் கடையில் மது விற்பனை ஜோராக நடைபெற்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் கடையை ஒட்டி ஒரு ஆட்டோ வேகமாக வந்து நின்றது. பின்னர் ஏற்கனவே மதுபாட்டில்கள் இறக்கி வைக்கப்பட்டிருந்த கடையின் ஷட்டரை சிலர் வேகமாக திறந்தனர். பிறகு பெட்டி, பெட்டியாக அங்கிருந்து குறிப்பிட்ட சில மதுவகை பாட்டில்களை எடுத்து ஆட்டோவில் ஏற்றினர். மேலும், கடையில் இருந்து 2 பெரிய அளவிலான பைகளிலும் மதுபாட்டில்களை அடுக்கி வைத்து மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை ஆட்டோவில் ஏற்றியதை பார்த்து மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்டோவில் மொத்தமாக மதுபாட்டில்களை ஏற்றி சென்றது தொடர்பாக சிலர் கடையின் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர்கள் தேவையில்லாமல் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது? என்று தெரிவித்து தொடர்ந்து மதுவிற்பனையில் ஈடுபட தொடங்கினர்.
இது ஒருபுறம் இருக்க, பெரமனூர் மதுக்கடையில் இருந்து வேறு ஒரு கடைக்கு ஆட்டோவில் மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டதா? அல்லது இரவில் 10 மணிக்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய மதுபாட்டில்கள் மொத்தமாக சிலருக்கு விற்பனை செய்யப்பட்டதா? என்றும், அல்லது ஏ.சி.பாருக்கு கமிஷன் அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்கள் விற்பனை செய்தார்களா? என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.
பொதுவாக டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து வந்து சிலர், பீர் பாட்டில்கள், குவார்ட்டர் பாட்டில்களை மொத்தமாக எடுத்து செல்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் கூடுதலாக விற்பனை செய்வதற்கு மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி செல்கிறார்களா? என்று தெரியவில்லை. பெரமனூர் மதுக்கடை மட்டுமின்றி அனைத்து கடைகளிலும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.5 முதல் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. குறிப்பிட்ட மதுவகைகளை கடை ஊழியர்களின் லாபத்திற்காக வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story