அரசின் நலத்திட்டங்கள் மலைவாழ் மக்களிடம் முறையாக சென்றடைவதில்லை மனித உரிமை கமி‌ஷன் நிர்வாக தலைவர் வேதனை


அரசின் நலத்திட்டங்கள் மலைவாழ் மக்களிடம் முறையாக சென்றடைவதில்லை மனித உரிமை கமி‌ஷன் நிர்வாக தலைவர் வேதனை
x
தினத்தந்தி 19 March 2018 3:45 AM IST (Updated: 19 March 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

அரசின் நலத்திட்டங்கள் மலைவாழ் மக்களுக்கு முறையாக சென்றடைவதில்லை என்று மனித உரிமை கமி‌ஷன் நிர்வாக தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மறையூர்,

மறையூரில், மலைவாழ் மக்கள் குறைகேட்கும் முகாம் நடந்தது. மாநில மனித உரிமை கமி‌ஷன் நிர்வாக தலைவர் மோகன் தாஸ் தலைமை தாங்கி மலைவாழ்மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் மறையூர், காந்தலூர் உள்ளிட்ட பகுதிளை சேர்ந்த ஏராளமான மலைவாழ் மக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு மனு கொடுத்தனர்.

முகாமில், சமூக நலத்துறை செயல் அதிகாரி பிஜு பிரபாகரன், மனித உரிமை கமி‌ஷன் செயலாளர் முகமது ராபி, தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுந்தரம், மறையூர் பஞ்சாயத்து தலைவர் ஜோமோன் தாமஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநில மனித உரிமை கமி‌ஷன் தலைவர் மோகன்தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

மலைவாழ் மக்களுக்கு அரசு செலவு செய்யும் பணத்தில் பத்தில் ஒரு பங்கு கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. அரசின் நலத்திட்டங்கள் முறையாக அவர்களை சென்றடைவதில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். மலைவாழ் மக்களிடம் இளவயது திருமணம் அதிகரித்துள்ளது.

இளவயது திருமணம் முடியும் முன் போலீசாருக்கு தகவல் கிடைப்பதில்லை. மலைவாழ் மக்களுக்கு இப்போது பாரம்பரிய உணவு கிடைப்பதில்லை. அரசு வழங்கும் இலவச அரிசி, கோதுமை தான் கிடைக்கிறது. இதனால் அவர்கள் ஆரோக்கியமாக இல்லை. மலைவாழ் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story