வேட்டவலம் நூலகம், அங்கன்வாடி கட்டிடங்கள் அருகில் மாடுகள் கட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம்
வேட்டவலம் நூலகம், அங்கன்வாடி கட்டிடங்கள் அருகில் மாடுகள் கட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வேட்டவலம்,
வேட்டவலம் ராஜாஜி தெருவில் நூலக கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடங்களின் எதிரே ஒரு சிலர் மாடுகளை கட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நூலகத்தில் சென்று புத்தகங்களை வாசித்து செல்கின்றனர்.
நூலக கட்டிடம் எதிரே மாடுகள் கட்டும் நபர்கள், அதன் சாணத்தை அள்ளாமல் அப்படியே விட்டு விட்டு செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்கன்வாடி மைய கட்டிடமும் அருகே அமைந்திருப்பதால் அங்கன்வாடியில் படிக்கும் சுமார் 30 குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
குழந்தைகள் அங்கன்வாடிக்குள் செல்ல முடியாமல் வழியிலேயே டிராக்டர் மற்றும் டிப்பரை சிலர் நிறுத்துகின்றனர். மேலும் அங்கு பொதுமக்கள் பயன்படுத்தும் சிறிய குடிநீர் தொட்டி அருகில் உள்ளதால், குடிநீர் பிடிக்க முடியாத அளவுக்கு சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மாட்டின் சாணமும், கோமியமும் தேங்கி அங்கேயே இருப்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அருகே அரசு தொடக்கப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story