போட்டித்தேர்வு குறித்து ஆன்லைனில் விண்ணப்பிக்க, கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
போட்டித்தேர்வு குறித்து ஆன்லைனில் விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளுக்கு அட்டவணை வழங்கப்படும் என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபி கரட்டடிபாளையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சூறாவளிக்காற்றால் வீடுகளின் கூரைகள் பறந்தன. இதில் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரணத்தொகையை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்த இடத்தில் யார் பாதித்தாலும் நிவாரண பணிகளை இந்த அரசு உடனடியாக நேரில் சென்று மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்கும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறார்கள். பிளஸ்-2 தேர்வுகள் முடிந்தவுடன் அரசு சார்பில் மாணவர்களுக்கு ஒரு அட்டவணை தரப்பட உள்ளது. அதில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தகுதி தேர்வு மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்து ஆன்லைன் மூலமாக எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற தகவல் இருக்கும். இதற்காக ஏற்பாடுகளை தமிழக கல்வித்துறையானது செய்து வருகிறது.
மேலும் நம் மாணவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள். எதையும் சந்திக்ககூடிய திறமை வாய்ந்தவர்களாக உள்ளார்கள். தற்போது பிளஸ்-1, பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளை மாணவர்கள் சிறப்பாக எழுதி வருகிறார்கள். இதற்காக கல்வியாளர்கள் பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார். கோபியில் வரும் ஜூன் மாதத்தில் தனியாரும், அரசும் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதன் மூலம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறலாம்.
பேட்டியின் போது சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்துரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story