பொது இ-சேவை மையங்களில் 15 வகையான சான்றிதழ்கள் வழங்கும் வசதி அறிமுகம் கலெக்டர் பிரபாகர் தகவல்
பொது இ-சேவை மையங்களில் 15 வகையான சான்றிதழ்கள் வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 313 பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கான சான்றிதழ் ஆகியனவும், பட்டா மாறுதல், சமூக நலத்துறை தொடர்பான சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த இ-சேவை மையங்களில் வருவாய்த்துறை மூலமாக வழங்கப்படும் 15 வகையான சான்றிதழ்கள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சான்றிதழ்களை ரூ.60 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
பொது இ-சேவை மையங்களில் விவசாய வருமானம், வாரிசு, குடிபெயர்வு, சிறு குறு விவசாயி, இருப்பிடம், ஆண் குழந்தை இல்லாதது, கலப்பு திருமணம், சொத்து மதிப்பு, திருமணம் ஆகாதவர், விதவை, அடகு வணிகர் உரிமம், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி, கல்லூரிகளின் நகல் சான்று, வேலையில்லாதவர், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆகியவற்றுக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான வசதிகள் உள்ளன. இந்த சான்றிதழ்கள் தேவைப்படுபவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று உரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story