டாஸ்மாக் மதுபான பார்களில் 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக புகார் நடவடிக்கை எடுக்க கோரி சப்–கலெக்டரிடம் மனு


டாஸ்மாக் மதுபான பார்களில் 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக புகார் நடவடிக்கை எடுக்க கோரி சப்–கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 20 March 2018 3:30 AM IST (Updated: 20 March 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் மதுபான பார்களில் 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக சப்–கலெக்டரிடம் தி.மு.க.வினர் புகார் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது தி.மு.க. நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு அனுமதி இல்லாமல் 24 மணி நேரமும் மதுபான பார்கள் இயங்கி வருகின்றன. மேலும் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக ரூ.5 முதல் ரூ.20 வரை மதுபாட்டில்களை விற்பனை செய்கின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து அதிக விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி ஜோதி நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பொள்ளாச்சி நகராட்சி 35–வது வார்டு ஜோதி நகருக்கு கோட்டூர் ரோடு ஓம்பிரகாஷ் தியேட்டர் பகுதியில் இருந்து செல்லும் சாலையில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி எம்.ஜி. நகரில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பேரூராட்சி நிர்வாகம் கழிவுநீர் ஓடை அமைத்து சாக்கடை நீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story