துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் நூதன முறையில் ரூ.15 லட்சம் தங்கம் கடத்தல்


துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் நூதன முறையில் ரூ.15 லட்சம் தங்கம் கடத்தல்
x
தினத்தந்தி 20 March 2018 4:30 AM IST (Updated: 20 March 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை,

துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சென்னையை சேர்ந்த நூர்முகமது மகன் காதர்மைதீன் (வயது 35) என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கொண்டு வந்த ‘டிராலி பேக்கில்‘ மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அதனை சோதனை செய்தபோது, அதில் தங்கத்தால் ஆன கார்பன் பேப்பர்கள் மூலம் அந்த டிராலி பேக் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர், அதிகாரிகள் அந்த தங்க கார்பன் பேப்பரை டிராலி பேக்கில் இருந்து வெட்டி எடுத்து, அதில் இருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் காதர் மைதீனையும் கைது செய்தனர்.

இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், “துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த விமானத்தில் வந்த அனைத்து பயணிகள், அவர்களது உடமைகளை சோதனை செய்தோம்.

அப்போது காதர் மைதீன் கொண்டு வந்த டிராலி பேக்கை சோதனை செய்தபோது அதில் துணிகள் மட்டும் இருந்தது. மேலும் அதில், தங்க நிறத்திலான கார்பன் பேப்பர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்து, அதில் இருந்த கார்பன் பேப்பர்களை சோதனை செய்தோம். அவை அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பின்னர் அதில் இருந்த 514 கிராம் எடைகொண்ட தங்க கார்பன் பேப்பர்களை கைப்பற்றினோம்.

பொதுவாக கார்பன் பேப்பர்களை ஸ்கேன் செய்ய முடியாது.

அதனை அறிந்தே, அவர் தங்கத்தினால் ஆன கார்பன் பேப்பரை கடத்தி வந்துள்ளார்” என்றனர்.

இதுபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் மருத்துவ பெல்ட்டில் மறைத்து வைத்து தங்கம் கடத்திய வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story