சோளத்தட்டை ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு மின்கம்பியில் உரசியதால் விபத்து


சோளத்தட்டை ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு மின்கம்பியில் உரசியதால் விபத்து
x
தினத்தந்தி 20 March 2018 4:30 AM IST (Updated: 20 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே சோளத்தட்டை ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி பகுதியில் இருந்து சோளத்தட்டை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. அந்த லாரி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சம்பட்டி மேம்பாலம் அருகே சென்றபோது மேலே சென்ற மின்கம்பியில் சோளத்தட்டை உரசியது. இதில் சோளத்தட்டை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் சத்தம் போடவே, அதன் டிரைவர் லாரியை வேகமாக திருப்பி ஒரு வீட்டின் அருகே நிறுத்தி விட்டு கீழே குதித்து உயிர் தப்பினார். பின்னர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மணப்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கிருந்த இளைஞர்கள் சிலரும் லாரியில் ஏறி எரிந்து கொண்டிருந்த சோளத்தட்டைகளை எடுத்து வெளியில் வீசினர். அதன்மீது தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் டீசல் டேங்க் தீயில் வெடித்து விடாதபடி அதன்மீதும் தண்ணீர் ஊற்றப்பட்டது. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் லாரியில் இருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சோளத்தட்டைகள் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி சிறிது நேரம் புகைமூட்டத்துடன் காணப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் அந்த பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story