தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மீது புகார்: பிளஸ்-2 மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்


தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மீது புகார்: பிளஸ்-2 மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 20 March 2018 3:45 AM IST (Updated: 20 March 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே, தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மீது புகார் கூறி பிளஸ்-2 மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீரபாண்டி,

தேனி அருகே முத்துதேவன் பட்டியில், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி, பிளஸ்-2 தேர்வு மையமாக உள்ளது. இங்கு 578 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். இயற்பியல், பொருளியல் தேர்வுகள் நேற்று நடந்தது. தேர்வு முடிந்து மாணவ- மாணவிகள் வெளியே வந்தனர்.

அப்போது தேர்வு அறையை கண்காணிக்க வந்திருந்த கண்காணிப்பாளர்கள், தங்களிடம் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொண்டதாக புகார் கூறினர். இதன் காரணமாக தங்களால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்றும் தெரிவித்தனர். இதனை கண்டித்து, மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விடைத்தாள்களை ஏற்றி செல்லும் வாகனத்தை வெளியே செல்ல விடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோரும் அங்கு குவிந்தனர். இதனையடுத்து அவர்கள், மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறியதாவது:-

தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் எங்களிடம் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொண்டனர். சம்பந்தம் இல்லாத விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தினர். வினாத்தாளில், முதல் பக்கம் மட்டுமே எங்களது தேர்வு எண்ணை எழுதுவோம். ஆனால் வினாத்தாளில் அனைத்து பக்கங்களிலும் தேர்வு எண்ணை எழுத சொல்லி வற்புறுத்தினார்கள். இதுகூட பரவாயில்லை.

முதலில் தெரிந்த வினாக் களுக்கு பதிலை எழுதிவிட்டு, தெரியாத கேள்விகளுக்கு யோசித்து பின்னர் எழுதுவது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக, முதல் கேள்விக்கு விடை எழுதிவிட்டு 2-வது மற்றும் 3-வது கேள்விக்கு வரிசையாக பதில் எழுத வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்தனர்.

இதனால் தாமதமாக நினைவில் வரும் சரியான விடைகளை கூட, தவறாக எழுதும் அளவுக்கு தள்ளப்பட்டோம். இதன் காரணமாக எங்களுக்கு மதிப்பெண்கள் குறையும் நிலை உள்ளது. எனவே எங்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவர்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி, வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இது தொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள்-பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக தேர்வை கண்காணிக்க வந்திருந்த பார்வையாளர்கள், வீட்டுக்கு செல்லாமல் ஒரு அறையில் அமர்ந்திருந்தனர். போராட்டம் முடிந்த பிறகு அவர்கள் பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story