குடியாத்தம் அருகே பள்ளி வேனை மறித்த ஒற்றை காட்டு யானை வனஊழியரையும் விரட்டியது


குடியாத்தம் அருகே பள்ளி வேனை மறித்த ஒற்றை காட்டு யானை வனஊழியரையும் விரட்டியது
x
தினத்தந்தி 20 March 2018 3:30 AM IST (Updated: 20 March 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே பள்ளி வேனை ஒற்றை காட்டு யானை மறித்தது. மேலும் வனஊழியரையும் யானை விரட்டியது.

குடியாத்தம்,

குடியாத்தத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லை உள்ளது. சைனகுண்டாவை அடுத்த ஆந்திர மாநில வனப்பகுதியில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது. இங்கிருந்து யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அடிக்கடி தமிழக எல்லையோரம் உள்ள மோர்தானா அணை, சைனகுண்டா, தனகொண்டபல்லி, கொட்டமிட்டா உள்ளிட்ட கிராமப்புறங்களை ஒட்டியபடி உள்ள வனப்பகுதிகளிலும், விளைநிலங்களிலும் புகுந்து அடிக்கடி பயிர்களை நாசம் செய்து வந்தன. வனத்துறையினரும், கிராமமக்களும் யானைகளை விரட்டி வந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த யானைகள் கூட்டம் கிருஷ்ணகிரி, குப்பம் காட்டுப்பகுதி வழியாக குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு வனப்பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தமிழக மற்றும் ஆந்திர மாநில எல்லைப்பகுதி, காட்டுப்பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிகிறது. தொடர்ந்து எல்லையோர தமிழக கிராமங்களான மோர்தானா, சைனகுண்டா, தனகொண்டபல்லி உள்ளிட்ட பகுதிகளில் பயிர்களை யானைகள் சேதப்படுத்தி வந்தன.

கடந்த சில நாட்களாக இந்த யானைக்கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஒற்றை யானை எல்லையோர கிராமங்களுக்கு அருகே உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்து வந்தது.

குடியாத்தம் - பலமனேர் சாலையில் சைனகுண்டா கிராமம் அருகே இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் மோர்தானா கிராமம் உள்ளது. இந்த 9 கிலோமீட்டர் தார் சாலையும் வனப்பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் மோர்தானா வனப்பகுதி சாலையில் ஒற்றை யானை சுற்றி திரிந்துள்ளது. இதனால் மோர்தானா கிராமமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் மோர்தானா கிராமத்தில் இருந்து கொட்டமிட்டா கிராமத்திற்கு பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேனை மாரியப்பன் என்பவர் வனப்பகுதி சாலையில் ஓட்டி வந்தார்.

அப்போது இருக்கல்கோடு என்ற பகுதி அருகே வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே ஒற்றை யானை நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வேனை சுமார் 100 அடி தொலைவில் நிறுத்தினார். வேனில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது யானை சிறிதுநேரம் அதே இடத்தில் நின்றுவிட்டு பின்னர் காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனை தொடர்ந்து வேன் டிரைவர் பள்ளிக்கு வந்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் எஸ்.ஏ.ராமன், மாவட்ட வனஅலுவலர் சுமேஷ்சோமன் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் குமார் தலைமையில் வனக்காப்பாளர்கள் வடிவேல், வெங்கடேசன், ராஜேந்திரன், பழனி, வனராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது பூவாகமரம் என்ற பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒற்றை யானை அந்த வழியாக சென்றவர்களை விரட்டியது. யானையை விரட்ட சென்ற வனக்காப்பாளர் வெங்கடேசனையும் விரட்டியது. இதில் மயிரிழையில் வெங்கடேசன் உயிர் தப்பினார். இதனையடுத்து வனத்துறையினர் பிளாஸ்டிக்கால் ஆன துப்பாக்கி போன்ற கருவியில் ‘கார்பைட்’ கல் போட்டு வெடிக்க வைத்தனர். மேலும் பட்டாசுகளையும் வெடித்தனர். இதனால் அந்த ஒற்றை யானை காட்டுப்பகுதிக்குள் சென்றது.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் வேலைக்கு செல்வதற்கும், பள்ளி மாணவர்கள் வெளியே சென்று வருவதற்கும் இந்த வனப்பகுதி சாலை மட்டும்தான் உள்ளது. இந்த சாலையில் திரியும் யானைகளால் அச்சுறுத்தல் உள்ளதாகவும், எனவே யானைகளை நிரந்தரமாக காட்டுப்பகுதிக்கு விரட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story