பட்டதாரி ஆசிரியையை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ‘பிசியோதெரபிஸ்ட்’ கைது


பட்டதாரி ஆசிரியையை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ‘பிசியோதெரபிஸ்ட்’ கைது
x
தினத்தந்தி 20 March 2018 4:15 AM IST (Updated: 20 March 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அருகே பட்டதாரி ஆசிரியையை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ‘பிசியோதெரபிஸ்ட்டை’ போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் உள்பட 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வடகரை ஆலத்தூர் மாளிகை திடல் மெயின் ரோட்டில் வசித்து வரும் ரத்தினசபாபதி மகள் வெண்ணிலா(வயது25). இவர் திருவாரூர் மாவட்டம் ஆவுர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் புலிவலம் கீழபடுகையை சேர்ந்த தர்மபாண்டியன் மகன் விஸ்வநாதனுக்கும் கடந்த 30.11.2017 அன்று பாபநாசத்தில் திருமணம் நடைபெற்றது.

விஸ்வநாதன், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ‘பிசியோதெரபிஸ்டாக’ வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் விஸ்வநாதன் ஏற்கனவே மதுரையை சேர்ந்த ‘பிசியோதெரபிஸ்ட்’ நிசாந்தியை காதலித்து திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை வெண்ணிலா, இதுகுறித்து விஸ்வநாதனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர், இந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவேன் என வெண்ணிலாவை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து வெண்ணிலா பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் ஏற்கனவே நிசாந்தி என்ற பெண்ணை விஸ்வநாதன் முதல் திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றியதாகவும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை தர்மபாண்டியன், சகோதரி சாருமதி, சகோதரர் வேலவன், உறவினர்கள் கார்த்தியேகன், சுபத்ரா, தாயார் விஜயகுமாரி ஆகியோர் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல் திருமணம் செய்ததை மறைத்து 2-வது திருமணம் செய்த விஸ்வநாதனை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை மாஜிஸ்திரேட்டு ராஜசேகர், 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் 2-வது திருமணத்திற்கு உடந்தையாக இருந்த விஸ்வநாதனின் பெற்றோர் உள்பட 6 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story