இளம்பெண்ணை கத்தியால் குத்திய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


இளம்பெண்ணை கத்தியால் குத்திய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 20 March 2018 3:45 AM IST (Updated: 20 March 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை கத்தியால் குத்தியது தொடர்பான வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பட்டுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்த முருகையன் மகள் கலாராணி (வயது 28). முருகையன் இறந்து விட்டார். கலாராணி, தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்துக்கும், அதே ஊர் வடக்கு தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் விக்னேஷ்(26) குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 21-ந் தேதி நள்ளிரவில் கலாராணி தனது வீட்டின் வராண்டா பகுதியில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சென்ற விக்னேஷ், கலாராணியின் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கலாராணி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கலாராணி நலம் அடைந்து வீடு திரும்பினார். இதுதொடர்பாக வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை பட்டுக்கோட்டை உதவி அமர்வு மற்றும் சார்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி கே.அல்லி நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், கலாராணியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக விக்னேசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், கத்தியால் குத்திய குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். 

Next Story