சேலம்-கோவை இடையே மோட்டார் சைக்கிள் பதிவெண்ணை வைத்து இயக்கிய ஆம்னிபஸ் பறிமுதல்


சேலம்-கோவை இடையே மோட்டார் சைக்கிள் பதிவெண்ணை வைத்து இயக்கிய ஆம்னிபஸ் பறிமுதல்
x
தினத்தந்தி 20 March 2018 3:30 AM IST (Updated: 20 March 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

சேலம்-கோவை இடையே மோட்டார் சைக்கிள் பதிவெண்ணை வைத்து இயக்கிய ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம், 

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு டி.என். பி.பி. 2288 என்ற பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் ஒன்று பஸ் பெயர் எதுவும் இன்றி பயணிகளை ஏற்றுவதாகவும், அந்த ஆம்னி பஸ் மீது சந்தேகம் உள்ளதாகவும், சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கடேசன், செந்தில் ஆகியோர் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.

புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் சென்னை செல்ல தயாராக இருந்த ஆம்னி பஸ்களை சோதனையிட்டனர்.

அப்போது அங்கு கோவைக்கு புறப்பட தயாராக நின்ற ஆம்னி பஸ் ஒன்றை சோதனையிட்டனர். ஆம்னி பஸ்சின் பதிவெண்ணை ஆய்வு செய்ததில், அது மோட்டார் சைக்கிளுக்கான பதிவெண் என்பது தெரியவந்தது. மேலும் வாகனத்துக்கான ஜேஸ் எண்(குறியீட்டு எண்) ஆய்வு செய்தபோது, அது ஆந்திர மாநிலத்தில் உள்ள வாகனத்தின் எண் என்பதும் தெரியவந்தது.

மேலும் ஆம்னி பஸ்சுக்கான ஆவணங்களை சரிபார்த்தபோது, அத்தனையும் போலியாக தயாரிக்கப்பட்ட ஜெராக்ஸ் நகல்கள் என்பதும் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த ஆம்னி பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறுகையில்,“பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ் மோட்டார் சைக்கிளின் பதிவெண்ணை வைத்து தற்காலிகமாக இயக்கி வந்துள்ளனர். ஆம்னி பஸ்சின் உரிமையாளர் கோவையை சேர்ந்தவர். ஆந்திர மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த ஆம்னி பஸ்சை விலைக்கு வாங்கி, அதை உரிய முறையில் பதிவு செய்யாமல் போலி ஆவணங்களை தயார் செய்து ஆம்னி பஸ்சை இயக்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது“ என்றார்.

Next Story