மங்கலம் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு


மங்கலம் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 20 March 2018 3:30 AM IST (Updated: 20 March 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

மங்கலம் அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சிறுவன் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை தாலுகா மங்கலம் அருகில் உள்ள மேட்டு சாணானந்தல் மேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு அருண் (வயது 12) என்ற மகனும், ஆனந்தி (10) என்ற மகளும் உள்ளனர். முருகன் களஸ்தம்பாடி புளியங்குளம் கூட்ரோட்டில் டீக்கடை வைத்து உள்ளார்.

அருண் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தந்தையின் டீக்கடைக்கு வந்து சென்ற அருண் வீடு திரும்பவில்லை. அருணை அவரது தந்தை முருகன் மற்றும் உறவினர்கள் பல இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து முருகன், தனது மகன் அருண் காணவில்லை என்று மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று காலை முருகனின் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் ஒரு சிறுவனின் உடல் மிதப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மங்கலம் போலீசார் சென்று கிணற்றில் இறங்கி சிறுவனின் உடலை மீட்டு வெளியே எடுத்து வந்தனர்.

அப்போது கிணற்றில் இறந்து கிடந்தது காணாமல் போன முருகனின் மகன் அருண் என்பது தெரியவந்தது. அருணின் உடலை பார்த்து முருகன் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து அருணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் இறந்தானா? அல்லது கொலை செய்து சிறுவனின் உடல் கிணற்றில் வீசப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story