பா.ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் கைது


பா.ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 March 2018 4:00 AM IST (Updated: 20 March 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், சூதாட்டத்தை தடுக்க சென்ற போலீஸ்காரர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்திய பா.ஜனதா பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்தில் பசப்பா கனிகேரா, சரணபசப்பா ஆகியோர் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருகிறார்கள். நேற்று முன்தினம் யுகாதி பண்டிகையையொட்டி வர்த்தூர் அருகே சித்தாபுராவில் உள்ள அரசு பள்ளிக்கூட வளாகத்தில் மர்மநபர்கள் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பற்றி அறிந்ததும், போலீஸ்காரர்களான பசப்பா கனிகேராவும், சரணபசப்பாவும் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றனர்.

பின்னர், சூதாட்டத்தை கைவிட்டுவிட்டு செல்லும்படி போலீஸ்காரர்கள் அவர்களிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால், பள்ளிக்கூட வளாகத்தில் இருந்த சூதாட்டக்காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் போலீஸ்காரர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர்கள் உடனடியாக அவர்களிடம் இருந்து தப்பித்து வந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சம்பவம் குறித்து தெரிவித்தனர். உடனடியாக அங்கு கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டனர். இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் சித்தாபுராவை சேர்ந்த குமார் (வயது 30), சந்தீப்(27), மூர்த்தி(21) மற்றும் முரளி(30) என்பது தெரியவந்தது. தாக்குதலுக்கு உள்ளான போலீஸ்காரர்கள் சம்பவம் குறித்து வர்த்தூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கைதான சந்தீப், பா.ஜனதா கட்சியின் பிரமுகர் ஆவார்.

இதுகுறித்து ஒயிட்பீல்டு துணை போலீஸ் கமிஷனர் அப்துல் அஹாத் கூறுகையில், ‘ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர்களான பசப்பா கனிகேரா, சரணபசப்பா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடிவருகிறோம். தாக்குதலுக்கு உள்ளான போலீஸ்காரர்கள் 2 பேரும் ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்தில் பணி செய்பவர்கள். ஆனாலும் வர்த்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கிடைத்த சூதாட்ட தகவலின் பேரில் அவர்கள் எதற்காக சோதனை மேற்கொண்டனர் என்பது தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்‘ என்றார்.

Next Story