பிச்சாவரத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுவதை தடுக்க வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் கோரிக்கை


பிச்சாவரத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுவதை தடுக்க வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் கோரிக்கை
x
தினத்தந்தி 20 March 2018 3:30 AM IST (Updated: 20 March 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

பிச்சாவரத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுவதை தடுக்க வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று மூ.மு.க. தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் கோரிக்கை விடுத்துள்ளார்.

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை ஒன்றியம் கவரப்பட்டு, கீழத்திருக்கழிப்பாலை, கீழப்பெரம்பை, இளந்திரமேடு, சிண்டாம்பாளையம், கவரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் வேளக்குடி கிராமத்தில் இருந்து கவரப்பட்டு, இளந்திரமேடு, சிண்டாம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால், இப்பகுதி பாசனத்துக்கு தேவையான தண்ணீர் வந்து சேருவது இல்லை.

இதனால், இந்த பகுதி விவசாயிகள், வாய்க்காலில் தடுப்பணை கட்டி மழை காலங்களில் வரும் தண்ணீரை சேமித்து வைத்து விவசாயம் செய்து வந்தனர். அந்த வகையில் தற்போது பெய்த பருவமழையின் மூலம் கிடைத்த நீரை கொண்டு சம்பா சாகுபடியில் ஈடுபட்டனர். நெல் நன்கு விளைந்து வந்த நிலையில், வாய்க்காலில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த நீர் வற்றி போனது. இதனால் நெற்பயிர்கள் கருகும் அபாய நிலைக்கு சென்றது.

இதையடுத்து, விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ராஜன் பாசன வாய்க்கால் விவசாய சங்க தலைவரும், மூவேந்தர் முன்னேற்ற கட்சியின் மாநில தலைவருமான ஸ்ரீதர்வாண்டையார், வெள்ளாற்றில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை தனது சொந்த செலவில் 3 இடங்களில் மின் மோட்டாரை வைத்து, தண்ணீரை வாய்க்காலில் சேமிக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதன் மூலம் நெற்பயிருக்கு தண்ணீர் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீதர்வாண்டையார் கூறுகையில், இந்த பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சினையால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இங்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்தால், உப்புநீர் தான் கிடைக்கிறது. வேளக்குடியில் இருந்து வரும் வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்தினால் பாசனத்துக்கு தேவையான தண்ணீரை இந்த பகுதி விவசாயிகளால் பெற முடியும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பிச்சாவரத்தில் இருந்து கடல் நீர் ஊருக்குள் புகுவதை தடுக்க பிச்சாவரம் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்.

இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று அவர் தெரிவித்தார்.

Next Story