மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் 50 பேர் கைது


மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் 50 பேர் கைது
x
தினத்தந்தி 21 March 2018 4:30 AM IST (Updated: 20 March 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி,

விசுவ இந்து பரி‌ஷத் சார்பில் நடத்தப்படும் ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம் அருகில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாண்டியன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் பாலஞானவேல், முத்துப்பேட்டை நகர செயலாளர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும். விசுவ இந்து பரி‌ஷத்தின் ரத யாத்திரையை அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.


இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதேபோல ஆலத்தம்பாடியிலும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


முத்துப்பேட்டை பெரியகடை தெருவில் இருந்து எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் பாட்சா தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மனிதநேய ஜனதா கட்சியினர் ஊர்வலமாக வந்து பழைய பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர்சித்திக், மாவட்ட நிர்வாகி தப்ரேஆலம்பாதுஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் வெற்றி, ஒன்றிய தலைவர் செல்வரசூன், நகர தலைவர் குணா.கண்ணதாசன்உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நன்னிலம் ஆற்று பாலம் அருகில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேரை நன்னிலம் போலீசார் கைது செய்தனர்.

Next Story