பெரியார் சிலை உடைப்பை கண்டித்து தஞ்சையில், திராவிடர் கழகத்தினர் சாலை மறியல் போராட்டம்


பெரியார் சிலை உடைப்பை கண்டித்து தஞ்சையில், திராவிடர் கழகத்தினர் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2018 4:30 AM IST (Updated: 20 March 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில், பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தஞ்சையில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. பிரமுகர் மீது தாக்குதல் நடத்தினர். கொடியையும் கொளுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே திராவிடர் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங் தலைமை தாங்கினார்.

இதில் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மண்டல செயலாளர் அய்யனார், மண்டல தலைவர் ஜெயராமன், மண்டல இளைஞரணி செயலாளர் வெற்றிக்குமார், பேச்சாளர் பெரியார்செல்வன், நகர தலைவர் நரேந்திரன், செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


பின்னர் அவர்கள் பழைய பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது பெரியார் சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், தமிழகத்தில் ராமர் ரத யாத்திரைக்கு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

தி.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது தி.க.வை சேர்ந்த சிலர் பழைய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருந்த பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை பிடுங்கி தீயிட்டுக்கொளுத்த முயன்றனர். இதனைப்பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்று கொடியை பிடுங்கினர். மேலும் கொடியை பிடுங்கி வந்த 4 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.


அப்போது தி.க.வினருக்கும் போலீசாருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், போலீசார் அழைத்துச்சென்ற 4 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துவர வேண்டும் என கூறி சாலையில் அமர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இதையடுத்து போலீசார் 4 பேரையும் மறியல் நடந்த இடத்துக்கு அழைத்து வந்தனர். அதன் பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story