ஸ்ரீரங்கம் ராமானுஜ மகாதேசிகர் உடல் அடக்கம் ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்


ஸ்ரீரங்கம் ராமானுஜ மகாதேசிகர் உடல் அடக்கம் ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்
x
தினத்தந்தி 21 March 2018 4:30 AM IST (Updated: 21 March 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ராமானுஜ மகாதேசிகர் உடல் ஸ்ரீரங்கத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் 11-வது ஜீயராக கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகர் (வயது 84) இருந்தார். இவர் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டு வந்தார். வயது மூப்பு மற்றும் மூச்சுத்திணறல், சிறுநீரக கோளாறு போன்றவற்றுக்காக கடந்த 4 மாதமாக சென்னை மயிலாப்பூர், தேசிகாசாரி சாலையில் உள்ள மடத்தில் தங்கி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் சென்னையில் காலமானார்.

இதைத்தொடர்ந்து அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள மடத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் சென்னையில் இருந்து வேன் மூலம் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீரங்கம் கொண்டு வரப்பட்டு கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவிலிருந்து நேற்று வரை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சேஷாத்திரி, ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், மணியார் ஸ்ரீதர், அறங்காவலர்கள் ரெங்காச்சாரி, வெங்கடேச உத்தமநம்பி, விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம்ஜி, ஸ்ரீரங்கம் அகோபில மட அழகிய சிங்கர், மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார், நித்யானந்தா சாமி மற்றும் அவரது சீடர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் இருந்து ஜீயருக்கு மரியாதை சமர்ப்பிக்கப்பட்டன.

நேற்று காலை 8 மணியளவில் மடத்தின் வழக்கப்படி ஜீயர் சுவாமிகளின் மறைவை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பிரம்மரதம் எனப்படும் பல்லக்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து மடத்தை வந்து சேர்ந்தது.

அதன் பின் மடத்தில் ஜீயர் சுவாமிகள் உடலுக்கு பல்வேறு பொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் ஜீயர் உடல் மூங்கில் கூடைக்குள் வைக்கப்பட்டு மடத்தின் வளாகத்திற்குள் சுமார் 8 அடி ஆழம், 5 அடி அகலம் கொண்ட குழியில் வைத்து காலை 11.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Next Story