பொங்கலூர் அருகே பருத்தி அரவை மில்லில் தீ விபத்து
பொங்கலூர் அருகே பருத்தி அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து நாசமானது.
பொங்கலூர்,
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உகாயனூர் சாலையில் சர்குலர் டெக்ஸ்டைல்ஸ் என்ற தனியாருக்கு சொந்தமான பருத்தி அரவை மில் உள்ளது. இந்த மில்லில் நேற்று காலை வழக்கம் போல் பருத்தி அரவை செய்யும் பணி நடைபெற்றது. அப்போது அரைத்து குவித்து வைக்கப்பட்டிருந்த பருத்தியில் இருந்து திடீரென புகை வந்தது. பின்னர் அதில் தீ பிடித்து மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதனை பார்த்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சத்தம்போட்டபடியே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ அந்த குடோனில் இருந்த மற்ற பஞ்சு குவியல்களிலும் பரவியது. உடனடியாக பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடோனில் பரவிய தீயை தண்ணீரை பீச்சியடித்து அணைத்த னர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் தீயில் சேதமான பஞ்சுகள் தனியாகவும் தீப்பிடிக்காத பஞ்சுகள் தனியாகவும் பிரித்து எடுக்கப்பட்டன.
அதற்குள் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சாம்பலானது. பஞ்சு அரைத்துக்கொண்டிருக்கும்போது அதில் இருந்த கல் எந்திரத்தில் சிக்கி தீப்பொறி உண்டாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பஞ்சு அரவை மில் உரிமையாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story