திருப்பூர் மாவட்டத்தில் கணினி மையங்கள் மூலம் ஓய்வூதியர்கள் வாழ்வுசான்று பெற வசதி
திருப்பூர் மாவட்டத்தில் கணினி மையங்கள் மூலம் ஓய்வூதியர்கள் வாழ்வுசான்று பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு நேர்காணலும், நேர்காணலுக்கு வர முடியாதவர்கள் வாழ்வுசான்று பெற்று கருவூலங்களுக்கு அனுப்புவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அந்தந்த கருவூலங்களில் நடைபெறுவது வழக்கம். தற்போது வாழ்வுசான்று பெறும் முறையை எளிமையாக்க அரசு சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமல் ஓய்வூதியதாரர்கள் வீட்டுக்கு அருகே உள்ள இ-சேவை கணினி மையங்கள் மூலம் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஜீவன் பிரமாண் வாழ்வு சான்றிதழ் திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
கருவூலத்துக்கு நேரில் வரும் ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு அட்டை, ரேஷன் கார்டு, ஓய்வூதியபுத்தகம், வங்கி கணக்கு புத்தகம், குடும்ப ஓய்வூதியர்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற சான்றிதழ் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.je-ev-a-n-p-r-a-m-a-an.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
நேரில் வர இயலாத ஓய்வூதியதாரர்கள் தங்களை சார்ந்தவர்களிடம் ஓய்வூதிய புத்தக நகல், வங்கி புத்தக நகல், வருமான வரி அட்டை நகல், வாழ்வுசான்று அரசிதழை பதிவு பெற்ற மத்திய, மாநில அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வாழ்வுசான்றுக்கான இணையதள முகவரி www.tn.gov.in/ka-ruv-o-o-l-am/. வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் மாஜிஸ்திரேட்டு, நோட்டரி வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவல் அதிகாரியிடம் வாழ்வுசான்று பெற்று இணையதளம் மூலம் அனுப்பலாம்.
ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும் தங்களுடைய முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நேர்காணலுக்கோ, வாழ்வுசான்றை அனுப்பி வைக்க தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story