ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 21 March 2018 3:00 AM IST (Updated: 21 March 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை,

ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

முதுகுளத்தூர் டி.கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப்பள்ளியின் மேற்கூரை கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி இடிந்து விழுந்ததில் மாணவர்கள் காயமடைந்தனர். இப்பள்ளி கட்டப்பட்டு 15 ஆண்டுக்கும் மேல் ஆகிறது. தரம் இல்லாமல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இப்பள்ளி மூடப்பட்டு மாணவர்களுக்கு அரசு இ-சேவை மையத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தேவையான குடிநீர், கழிப்பறை உள்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 மழலையர் பள்ளிகள், 934 தொடக்கப்பள்ளிகள், 215 உயர் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. பல பள்ளிகளின் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே டி.கிருஷ்ணாபுரம் தொடக்கப்பள்ளியை மறுசீரமைப்பு செய்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்யவும், காயமடைந்த மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குனர், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை ஏப்ரல் 17-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Next Story