போக்குவரத்து கழக அலுவலகத்தில் பெட்ரோல்- மண்எண்ணெய் பாட்டில்களுடன் வந்து டிரைவர், கண்டக்டர்கள் தற்கொலை மிரட்டல்


போக்குவரத்து கழக அலுவலகத்தில் பெட்ரோல்- மண்எண்ணெய் பாட்டில்களுடன் வந்து டிரைவர், கண்டக்டர்கள் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 21 March 2018 3:30 AM IST (Updated: 21 March 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு பெட்ரோல்- மண்எண்ணெய் பாட்டில்களுடன் வந்த டிரைவர்- கண்டக்டர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு, 

ஈரோடு சென்னிமலை ரோட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மண்டல பொது மேலாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று பகல் 11.30 மணி அளவில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர் -கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களாக பணியாற்றி வரும் சிலர் அலுவலக வளாகத்தில் நுழைந்தனர். அவர்களிடம் அலுவலக காவலர்கள் காரணம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதனால் யாரையும் காவலர்கள் உள்ளே விட அனுமதிக்கவில்லை. எனவே அவர்களுடன் வந்த ஒருவர் கையில் கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் சோதனை செய்தபோது 2 பேர் மண்எண்ணெய் பாட்டில்களை பைகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, பல்வேறு கோரிக்கைகளையும் கேட்டு அவர்கள் வந்ததாகவும், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க தற்கொலை போராட்டம் நடத்த முடிவு செய்து இருந்ததாகவும் கூறினார்கள்.

அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம் விசாரித்தபோது ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட கோரிக்கைகளுடன் வந்திருப்பதும், அவர்களாக ஒன்று சேர்ந்து இந்த தற்கொலை போராட்டத்துக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் மேலும் விசாரித்தபோது, பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்காக 2 பேரும், இலகுவான பணி கேட்டு 2 பேரும், மருத்துவ விடுப்பு கால நிலுவைத்தொகை கேட்டு 2 பேரும், பணிக்கு வராமல் நீண்ட விடுப்பு போட்டதற்காக வேலை வழங்கப்படாத ஒருவரும், ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒருவரும் என 8 பேர் தங்கள் புகார்களை போலீசாரிடம் கூறினார்கள்.

இதுபற்றிய விவரம் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது பொது மேலாளர் அலுவலகத்தில் இல்லை. எனவே பொது மேலாளரின் தனி அதிகாரி, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். புகார்களை தனி அதிகாரி தலைமையில் அதிகாரிகள் முழுமையாக கேட்டு அறிந்தனர். பின்னர் அவர்களின் கோரிக்கைகளை பொது மேலாளர் வழியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனருக்கு தெரிவிப்பதாக பதில் அளித்தனர்.

அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய் பாட்டில்களுடன் வந்த கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் கூறும்போது, ‘ஒரு வார காலத்தில் உரிய தீர்வு அளிப்பதாக உறுதி அளித்து உள்ளனர். தீர்வு கிடைக்கவில்லை என்றால் போராட்டத்தை தொடர்வோம்’ என்றார்கள்.

இந்த சம்பவம் போக்குவரத்துக்கழக பொது மேலாளர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story