ஈரோடு வெண்டிபாளையம் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
ஈரோடு வெண்டிபாளையம் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு வெண்டிபாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளை கதவணை உள்ளது. அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அனைத்து கதவணைகளும் திறந்து விடப்பட்டு உள்ளன. மேலும், தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் மிகவும் குறைவாக செல்கிறது.
இந்தநிலையில் வெண்டிபாளையம் பகுதியில் கட்டளை கதவணையின் மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நேற்று மீன்கள் செத்து மிதந்தன. இதைப்பார்த்ததும் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், காவிரி ஆற்றில் சாக்கடை கழிவுநீர் மற்றும் சாய, தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதனால் மீன்கள் செத்து மிதந்ததாக தகவல் பரவியது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மலையாண்டி தலைமையில் அதிகாரிகள் வெண்டிபாளையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு செத்துக்கிடந்த மீன்களை பார்வையிட்டனர். மேலும், காவிரி ஆற்றில் செல்லும் தண்ணீரை எடுத்து சோதனை செய்து பார்த்தனர்.
காவிரி ஆற்றில் செல்லும் தண்ணீரை சோதனை செய்து பார்த்தபோது, அதில் 350 டி.டி.எஸ். அளவு காட்டுப்படுகிறது. 500 டி.டி.எஸ். வரை இருந்தால் அந்த தண்ணீரை பயன்படுத்தலாம். எனவே சாய, தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கப்படவில்லை. மேலும், மின்சார உற்பத்தி நிலையம் கடந்த சில மாதங்களாக இயங்காமல் உள்ளது. இதனால் அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை ஊழியர் வெளியேற்றி இருக்கலாம். இதன்மூலம் தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் குறைந்து, மீன்கள் செத்து மிதந்தன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story