குப்பைகளை நவீன முறையில் அகற்றும் பணி தீவிரம்


குப்பைகளை நவீன முறையில் அகற்றும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 March 2018 3:15 AM IST (Updated: 21 March 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

செம்பாக்கம் ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகளை நவீன முறையில் அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலர் ஹர்மந்தர் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த சேலையூர் அருகே செம்பாக்கம் ஏரி உள்ளது. 110 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரியில் 4½ ஏக்கர் இடத்தில் செம்பாக்கம் நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அந்த பகுதி முழுவதும் குப்பை கிடங்காக மாற்றப்பட்டு இருந்ததால் ஏரி நீர் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

எனவே ஏரியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் எனக்கோரி அந்த பகுதி குடியிருப்போர் சங்கத்தினர் தமிழக அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏரியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் ஏரியில் இருந்த குப்பை கிடங்கை ரூ.1 கோடியே 23 லட்சம் செலவில் ‘பயோ மைனிங்’ என்னும் நவீன முறையில் அப்புறப்படுத்தும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

அங்கு இருந்து அகற்றப்படும் குப்பைகள், எரிபொருட் கள் மற்றும் மக்கும் பொருட்கள் என பிரிக்கப்படுகிறது. குப்பைகளை அந்த பகுதியில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலர் ஹர்மந்தர் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பகுதியில் தரம் பிரிக்கப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள பொருட் களை அப்புறப்படுத்தவும், ஏப்ரல் மாத இறுதிக்குள் குப்பைகளை அகற்றும் பணிகளை முடிக்கும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் இளங்கோவன், மண்டல பொறியாளர் முருகேசன், செம்பாக்கம் நகராட்சி ஆணையாளர் வசந்தி, பொறியாளர் ஆசிர்வாதம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story