மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல்


மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 March 2018 4:30 AM IST (Updated: 21 March 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவெறும்பூர்,

விசுவ இந்து பரிஷத் இயக்கத்தின் சார்பில் ராமராஜ்ய ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் தொடங்கிய இந்த ரதயாத்திரை நேற்று கேரளா வழியாக தமிழ்நாட்டுக்கு வந்தது. இந்த ரத யாத்திரைக்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் பேசினர். அப்போது சட்டசபையில் கூச்சல்-அமளி ஏற்பட்டதை தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். பின்னர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தலைமை செயலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல திருச்சி மாவட்டத்திலும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவெறும்பூர் கடைவீதியில், முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன் மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி ஆகியோர் தலைமையில் 5 பெண்கள் உள்பட 65 பேர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் போலீசார் அவர்களை கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தா.பேட்டை கடைவீதியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.சேகரன் தலைமையில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள்கணேசன், நகர செயலாளர் தக்காளி தங்கராசு, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சிட்டிலரை சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தா.பேட்டை போலீசார், மறியல் செய்த 26 பேரை கைது செய்தனர்.

சமயபுரம் கடைவீதியில் தி.மு.க. நகர செயலாளர் துரை.ராஜசேகர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பி.இளங்கோவன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். மண்ணச்சநல்லூரில், எதுமலை பிரிவு சாலையில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமையில் நடந்த போராட்டத்தில் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

கல்லக்குடியில் நகர தி.மு.க. செயலாளர் பால்துரை தலைமையில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன், புள்ளம்பாடி இளைஞர் அணி அமைப்பாளர் தியாகு மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 40 பேர் திருச்சி-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொட்டியத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தி.மு.க. நிர்வாகிகள் கோட்டைமேடு சேகர், மேய்க்கல்நாயக்கன்பட்டி தங்கவேல், வையாபுரி, கனகராஜ் உள்பட 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

லால்குடி சந்தைப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் துரைமாணிக்கம் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

உப்பிலியபுரம் பஸ் நிறுத்தம் அருகே மறியல் செய்ததாக தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், அவைத்தலைவர் ஆர்.கே.துரைசாமி உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

முசிறி கைகாட்டியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவக்குமார், வழக்கறிஞர் அணி நிர்வாகி சப்தரிஷி உள்பட 30 பேரை முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

மணப்பாறையில் நகரச் செயலாளர் கீதா.ஆ.மைக்கேல்ராஜ், ஒன்றியச் செயலாளர் ராமசாமி தலைமையில் ஊர்வலமாக கோஷங்கள் எழுப்பியபடியே பஸ் நிலையம் அருகே வந்த தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

வையம்பட்டியில் ஒன்றியச் செயலாளர் சபியுல்லா தலைமையில் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 28 பேரை போலீசார் கைது செய்தனர். துவரங்குறிச்சியில் பேரூர் தி.மு.க. செயலாளர் பழ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர்கள் செல்வராஜ், சின்னடைக்கன் தலைமையில் பஸ் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை துவரங்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

புத்தாநத்தத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நகர பொறுப்பாளர் உதுமான் தலைமையில் ரதயாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எளமணம் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்ட 23 பேரை புத்தாநத்தம் போலீசார் கைது செய்தனர். 

Next Story