ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: மாவட்டத்தில் 37 இடங்களில் சாலை மறியல் போராட்டம்
ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் 37 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,183 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது.
இந்த ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் காந்தி சிலை அருகில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ராமராஜ்ய ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது, மேலும் சென்னையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் செய்த செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷம் எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
செஞ்சி கூட்டு ரோட்டில் செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் நகர செயலாளர் காஜா நஜீர் முன்னிலையில் தி.மு.க. வினர் மறியல் செய்தனர். தகவல் அறிந்த செஞ்சி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர். இதில் வக்கீல் மணிவண்ணன், அழகிரி, அன்பு, பழனி, மோகன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டார்மங்கலத்தில் கூட்டுரோட்டில் வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் மறியலில் ஈடுபட்ட ஒன்றிய பொருளாளர் தமிழரசன், சிட்டிபாபு, பெருமாள், ஸ்டாலின் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சேதுநாதன் தலைமையில் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.
இதேபோல் திருநாவலூரில் ஒன்றிய செயலாளர் வசந்தவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 60 பேரும், மரக்காணத்தில் நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரும், விக்கிரவாண்டியில் நகர செயலாளர் நயினாமுகமது தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரும், சங்கராபுரத்தில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரும் கைது செய்யப்பட்டனர்.
வளவனூரில் நகர செயலாளர் ஜீவா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், உளுந்தூர்பேட்டையில் நகர செயலாளர் டேனியல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரும், கள்ளக்குறிச்சியில் நகர செயலாளர் சுப்புராயலு தலைமையில் 35 பேரும், கீழ்குப்பத்தில் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரும், அரகண்டநல்லூரில் ஒன்றிய செயலாளர் பிரபு தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் அன்பு உள்பட 25 பேரும், அவலூர்பேட்டையில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் 35 பேரும், முண்டியம்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயரவிதுரை தலைமையில் 12 பேரும், தியாகதுருகத்தில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் 25 பேரும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் ஒன்றிய செயலாளர் முரளி தலைமையில் 35 பேரும், கண்டமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் 30 பேரும், பகண்டையில் ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமையில் 50 பேரும், சின்னசேலத்தில் நகர செயலாளர் செந்தில் தலைமையில் 19 பேரும், திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர் தங்கம் தலைமையில் தொகுதி பொறுப்பாளர் டி.என்.முருகன், நகர செயலாளர் கோபி, முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் குணா உள்பட 35 பேரையும், திருக்கோவிலூர் பைபாஸ் சாலையில் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் 25 பேரும், எலவனாசூர்கோட்டையில் மாவட்ட துணைத்தலைவர் சம்ஷாத் தலைமையில் 22 பேரும், கிளியனூரில் மாவட்ட துணை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் தலைமையில் 24 பேரும், கண்டாச்சிபுரத்தில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 64 பேரும், திண்டிவனத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரும், கோட்டக்குப்பத்தில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயமூர்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூரில் மறியலில் ஈடுபட்டதாக நகர செயலாளர் மனோகர் உள்பட 12 பேரும், விக்கிரவாண்டியில் ஒன்றிய செயலாளர் வெற்றிவேந்தன் உள்பட 18 பேரும், கண்டமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் செந்தில்முருகன் உள்பட 30 பேரும், கோட்டக்குப்பத்தில் துணைத்தலைவர் ஆசிப் தலைமையில் 30 பேரும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் துணை பொதுச்செயலாளர் இரணியன் தலைமையில் 25 பேரும், உளுந்தூர்பேட்டையில் முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் அறிவுக்கரசு தலைமையில் 25 பேரும், திருக்கோவிலூரில் நான்குமுனை சந்திப்பில் தொகுதி செயலாளர் விடுதலை செல்வன் தலைமையில் 20 பேரும் மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் ராம ராஜ்ய ரத யாத்திரையை தடை செய்ய வலியுறுத்தி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முஸ்தாக்தீன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் கலந்துகொண்டனர். உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 115 பேரை கைது செய்தனர்.
ஆக மொத்தம் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் 37 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 1,183 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் செஞ்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு செஞ்சி தொகுதி செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் தனஞ்செழியன், கலாநிதி, நகர நிர்வாகிகள் பிரபு, அரி, செந்தில், ராம்குமார், ஒன்றிய செயலாளர் ராஜராம் மற்றும் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சியில் மாவட்ட தலைவர் தனபால் தலைமையிலும், திண்டிவனத்தில் மாவட்ட தலைவர் சேரன் தலைமையிலும், கச்சிராயப்பாளையத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலு தலைமையிலும், சங்கராபுரத்தில் ஒன்றிய செயலாளர் தலித் சந்திரன் தலைமையிலும், தியாகதுருகத்தில் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையிலும், சின்னசேலத்தில் நகர செயலாளர் அம்பிகாபதி தலைமையிலும், மயிலத்தில் ஒன்றிய செயலாளர் தமிழ்முகிலன் தலைமையிலும், விழுப்புரத்தில் வக்கீல் தமிழ்மாறன் தலைமையிலும், கஞ்சனூரில் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையிலும், கள்ளக்குறிச்சியில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இவர்களை தவிர விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தி.மு.க. வக்கீல் அணி சார்பில் கல்பட்டு ராஜா தலைமையில் வக்கீல்களும், கள்ளக்குறிச்சியில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அப்துல்மாலிக் தலைமையில் அந்த அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story