சுற்றுச்சூழலுக்கேற்ற பயிர்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்


சுற்றுச்சூழலுக்கேற்ற பயிர்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 21 March 2018 3:15 AM IST (Updated: 21 March 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலுக்கேற்ற பயிர்களை சாகுபடி செய்ய வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய பயிர் ரகங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மண்ணியல் துறை தொழில் நுட்ப வல்லுனர் பாக்கியத்துசாலிகா வரவேற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிசேகரன் முன்னிலை வகித்தார்.

இயக்குனர் சுப்பிரமணியன் பேசுகையில், பாரம்பரிய ரகங்களிலிருந்து தோன்றிய நவீன உயர் விளைச்சல் ரகங்களின் சாகுபடியால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றோம். ஆனால் தவறான மேலாண்மை முறைகளால் நிலம், நீர், காற்று மாசுபாட்டினை ஏற்படுத்தி மீண்டும் பழமைக்கு மாறும் நிலையில் உள்ளோம் என்று கூறினார்.

நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், இயற்கை வளங்களை அழித்தும், நம் உடல் நலத்தை இழந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இச்சூழலில் பயிர் ரகங்களை பாதுகாத்து அவற்றில் இருக்கும் சிறப்பியல்புகளை வல்லுனர்களுடன் பகிர்ந்து விவசாயிகள் சுற்றுச் சூழலுக்கேற்ற பயிர் வகைகளையும், சாகுபடி முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். அதனை தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கலைச்செல்வனும் முகாமில் பேசினார்.

மாவட்டத்தில் புகழ் பெற்ற கொல்லம்பட்டி கத்தரிக்காய், பஞ்சவர்ணம் மா, கோவக்காய், அதல்காய், பாகற்காய் உள்ளிட்ட உள்ளுர் காய்கறிகள், சிறுதானிய பாரம்பரிய ரகங்களின் கண்காட்சி நடந்தது. அகில இந்திய அளவிலான தேசிய வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கான கருத்தரங்கினை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து உரையாற்றிய காட்சி விவசாயிகளுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், வேளாண் வணிகத்துறை அலுவலர் முத்தையா ஆகியோரும் கலந்து கொண்டனர். தாவர ரகங்கள் பாதுகாப்பு மற்றும் உழவர்களுக்கான உரிமை சட்டம் பற்றிய கையேடு வெளியிடப்பட்டது. முடிவில் தொழில் நுட்ப வல்லுனர் ஆனந்தி நன்றி கூறினார். 

Next Story