மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல்


மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 March 2018 4:00 AM IST (Updated: 21 March 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் விசுவ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்படும் ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் ரதயாத்திரை தொடங்கியது. இதனை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை, வாய்மேடு, வேதாரண்யம், திருகுவளை, தலைஞாயிறு ஆகிய இடங்களில் சாலைமறியல் ஈடுபட்ட தி.மு.க.வினர் 229 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல சீர்காழியில் நடைபெற்ற சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 68 பேரும், குத்தாலத்தில் 50 பேரும், மங்கநல்லூரில் 50 பேரும், திருவெண்காட்டில் 60 பேரும், கொள்ளிடத்தில் 30 பேரும், ஸ்ரீகண்டபுரம் கடைவீதியில் 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், ராமராஜ்ய ரதயாத்திரைக்கு எதிராக போராடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியார் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியில் ஈடுபட்ட விடுதலைசிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சிகளை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story