ரவுடி கொற கோபியை கொல்ல நோட்டமிட்ட கஜா கோஷ்டியினருக்கு ஓசூர் போலீசார் வலைவீச்சு


ரவுடி கொற கோபியை கொல்ல நோட்டமிட்ட கஜா கோஷ்டியினருக்கு ஓசூர் போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 March 2018 4:30 AM IST (Updated: 21 March 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

ரவுடி கொற கோபியை கொலை செய்வதற்காக நோட்டமிட்ட கஜா கோஷ்டியினரை பிடிக்க ஓசூர் போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.

ஓசூர்,

ஓசூர் ராம் நகரைச் சேர்ந்தவர் கோபி என்கிற கொற கோபி. பிரபல ரவுடி. கடந்த ஜனவரி மாதம் ரவுடி சேட்டு தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொற கோபி சரண் அடைந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கொற கோபிக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த கொற கோபியை கொலை செய்வதற்காக, ஓசூரில் இருந்து ஒரு கும்பல் ஆம்னி வேனில் சென்றனர். அவர்களை கொற கோபியின் உறவினர்கள் பார்த்ததும், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி சென்றார்கள்.

இது குறித்து கொற கோபியின் உறவினர்கள் சேலம் மாநகர போலீசில் புகார் செய்தனர். அதில் ஓசூர் பிரபல ரவுடி கஜா கோஷ்டி தான் கொலை செய்ய வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து கஜா கோஷ்டியை போலீசார் தேடினார்கள். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சேலம் மாநகர போலீசார் ஓசூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் ஓசூர் தனிப்படை போலீசார் கஜா கோஷ்டியை தேடி வருகிறார்கள். அவர்கள் பெங்களூருவில் இருப்பதாக தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஓசூரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொற கோபி ரவுடியிசத்தில் இருந்து வருகிறார். அவர் மீது கேபிள் டி.வி. அதிபர்கள் வசந்தன், மணி, மற்றும் நூருல்லா, ரவுடி சேட்டு ஆகிய கொலைகள், ஆள் கடத்தல், கொள்ளை என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. இதில் பல வழக்கில் விடுதலை பெற்றுள்ளார். கொலை, ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொற கோபியின் கோஷ்டிக்கும், வேறு ரவுடிகள் கோஷ்டிக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகின்றன.

ஓசூரில் தாலுகா அலுவலக சாலையில் வசித்து வந்த தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சூரி கடந்த 19.9.2016 அன்று ரெயில் நிலையம் எதிரில் நேரு நகரில் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் ரவுடி கஜா, ஓசூரைச் சேர்ந்த பாபு, சாஜித், பெங்களூரு ரவுடி தாமஸ் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். கொலையுண்ட சூரியின் தாய்மாமா கொற கோபி ஆவார். ஏற்கனவே கொற கோபிக்கும், கஜா கோஷ்டிக்கும் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், சூரியின் கொலை கொற கோபி கோஷ்டிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கஜா கோஷ்டி ஜாமீனில் வெளியே வந்ததும் பெங்களூரு சென்றனர். அங்கிருந்தவாறு அவர்கள் கொற கோபியை தீர்த்து கட்ட அவ்வப்போது ஓசூர் வந்துள்ளனர். இந்த நிலையில் தான் கொற கோபியுடன் இடையே நடந்த மோதலில் ரவுடி சேட்டு கொலை செய்யப்பட்டார்.

சேட்டு கொலையில் சரண் அடைந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்ட கொற கோபியை, ஓசூர் கோர்ட்டிற்கு அழைத்து வரும் வழியில் தீர்த்து கட்ட கஜா கோஷ்டி திட்டமிட்டனர். இதற்காக கஜா தரப்பினர் சேலம் சிறையில் பழக்கமான ஒரு பிரபல ரவுடி மூலமாக கன்னியாகுமரியைச் சேர்ந்த ரவுடி ’பாம்’ செல்வத்தை ஓசூர் வரவழைத்தனர். அவர் மீது 8 கொலைகள் உள்பட பல வழக்குகள் உள்ளன. வெடி குண்டு வீசி கொல்பவன் ஆவான்.அவன் கொற கோபியை போலீஸ் காவலில் இருக்கும் போதோ, அழைத்து வரும் போதோ வெடிகுண்டு வீசி கொல்ல தளியில் தங்கியிருந்தவாறு திட்டம் போட்டான். இதற்கிடையே கன்னியாகுமரியில் நடந்த இரட்டை கொலையில் பிடிபட்ட ஒருவன் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் பாம் செல்வத்தை போலீசார் தளி வந்து கைது செய்தனர்.

‘பாம்’ செல்வம் கைதானதால், தங்களின் அடுத்த முயற்சியாக கொற கோபியை தீர்த்து கட்ட கஜா கோஷ்டியே நேரடியாக களத்தில் இறங்கி ஓசூரில் இருந்து சேலம் சென்றுள்ளனர். அங்கும் கொற கோபியின் உறவினர்கள் பார்க்கவே, கஜா கோஷ்டியினர் தப்பி ஓடி விட்டார்கள். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

ஓசூரில் வாசவி நகரில் வசித்து வந்த கஜாவும், மகேசும் நண்பர்கள். ஒரு பிரச்சினையில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரையும் ஒரு கோஷ்டி, ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியது. இதில் மகேஷ் இறந்தார். கஜா உயிர் பிழைத்தார். எனது நண்பன் மகேசை கொன்றவர்களை நான் பழிக்கு பழி வாங்குவேன் என்று ரத்த வெள்ளத்தில் துடித்தபடி கஜா சபதம் போட்டார். அவ்வாறு அவர் கூறுவது “வாட்ஸ் அப்”பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் மகேஷ் கொலையில் சரண் அடைந்தவர்களை ஜாமீனில் வெளியே எடுக்க தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சூரி உதவியதாக கூறப்படுகிறது. மேலும் சூரியின் ஆதரவாளர்கள் சிலர் கஜாவை மிரட்டியதாக தெரிகிறது. இதில் தான் சூரிக்கும், கஜாவிற்கும் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் சூரி படுகொலை செய்யப்பட்டார். ஏற்கனவே கொற கோபி - கஜா கோஷ்டிக்கு இருந்த மோதல், சூரியின் கொலையால் மேலும் பெரிதானது. தற்போது ஓசூரில் அடுத்தடுத்து ரவுடிகள் கொலைகள் நடப்பதற்குள் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள். 

Next Story